ஒரே வார்த்தை.. ஓஹோன்னு வாழ்க்கை! 35 கோடிக்கு தாவ ரெடியான தவெக சமஉக்கள்? அட்வான்ஸ் கேட்டது யார்?
சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள "குதிரை பேரம்" சர்ச்சை புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர ஆதரவு அளிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மேலும் சில எம்.எல்.ஏ.க்களிடமும் பேரம் பேசப்பட்டதாகவும் அவர்கள் அட்வான்ஸ் பெறக் கூட தயாராக இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் தவெக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் சூழல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, இடைத்தேர்தல் , கட்சி தாவல் என பரபரப்பாகவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது எம்.எல்.ஏ ஒருவரிடம் நேரடியாக பேரம் பேசியதாகக் கூறப்படும் புகார் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் தன்னை தொடர்புகொண்டதாக கூறியுள்ளார்.
குதிரை பேரம்
அதில், இந்தியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜீஸ் (IPDS)" என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார். முதலில் அதை நிராகரித்ததாக கூறிய இளையராஜா, பின்னர் மீண்டும் தொடர்புகொண்ட அந்த நபர்கள், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு ஒத்துழைத்தால் ரூ.35 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா எம்எல்ஏ
மேலும், "இந்த விவகாரத்தில் எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்" என்று கூறியபோது, இதை வெளியே சொன்னால் தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மிரட்டியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அதன் தொடர்ச்சியாக, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை ஜூலை 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி
இந்த வழக்கில் நடந்த ஆரம்பகட்ட விசாரணையிலேயே மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, கைது செய்யப்பட்ட நரேஷ், திமுக முன்னாள் அமைச்சரும் தற்போது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை சென்னையில் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
அசோக்குமார்
அதேபோல், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தியே திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவை தொடர்புகொண்டு பேசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, பின்னணியில் வேறு யாரேனும் செயல்பட்டார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
சி.டி.ஆர். நிர்மல்குமார்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "கைது செய்யப்பட்ட நரேஷ் என்பவர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். காவல்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது. சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து தொடர்புகளும் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
வைகோ
இதற்கிடையில், இந்த விவகாரத்துக்கு மாறாக தமிழக அரசியல் சூழலில் இன்னொரு குற்றச்சாட்டையும் திமுக முன்வைத்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் இணைந்து சில எம்.எல்.ஏக்களை பதவி விலகச் செய்ய முயன்றதாக குற்றம்சாட்டி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இடைத்தேர்தல்
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "கைது நடந்த உடனேயே அதை சமாளிக்க ஆளுநரிடம் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும். சட்டப்பேரவையில் எங்களிடம் 120 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது" என்று பதிலளித்தார். ஒருபுறம் இடைத்தேர்தல், மறுபுறம் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறும் விவகாரம், அதனுடன் தற்போது ரூ.35 கோடி பேரம் புகார் என தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்பாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த வழக்கில் காவல்துறை விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால், வரும் நாட்களில் மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தை அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
எம்எல்ஏக்கள் யார்?
இளையராஜா மட்டுமல்லாது மேலும் சில தவெக எம்எல்ஏக்களிடம் அவர்கள் பேரம் பேசியதாகவும் ஒரு சிலர் முன் பணம் வாங்கக்கூடாது தயாராக இருந்தனர் என்ற தகவல் தற்போது பனையூர் வட்டாரங்களில் பரவி வருகிறது. இளையராஜா விஜய்யிடம் இது தொடர்பாக தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்துவிட்ட நிலையில் அட்வான்ஸ் பெற ஒப்புக்கொண்ட எம்எல்ஏக்கள் யார்? யார்? என்பது குறித்தான விசாரணை தனியே நடைபெற்று வருவதாக சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications