ஸ்டாலினை வீழ்த்திய விஎஸ் பாபு புறக்கணிப்பு.. விஜய் கேபினெட்டில் திடீர் திருப்பம்.. பின்னணி என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய விஎஸ் பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று தகவல் வெளி வந்துள்ளது. இதனால் விஎஸ் பாபு தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை சமாதானம் செய்ய ஆதவ் அர்ஜுனா தரப்பு முயன்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற முடிவு செய்திருந்தாலும், அடுத்த முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் நாளை மொத்தமாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்களும், தவெகவின் 19 எம்எல்ஏ-க்களும் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பது தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கின்றனர். இதனை காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதனால் தவெகவில் இருந்து யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தவெகவினர் மத்தியில் முதல்வர் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சன், நெல்லை தொகுதி எம்எல்ஏ ஆர்.எஸ்.முருகன் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்த தவெக எம்எல்ஏ விஎஸ் பாபுவுக்கு அமைச்சரவையில் இடம் கிடையாது என்று தெரிய வந்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் விஎஸ் பாபு தோற்கடித்தார். இதன்பின் விஎஸ் பாபு பெயர் தேசிய அளவில் பிரபலம் அடைந்தது. இதனால் தவெக அமைச்சரவையில் விஎஸ் பாபு பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஎஸ் பாபு பெயர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் இருந்து முதல்வர் விஜய் உட்பட ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ரமணன், ராஜ்மோகன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இன்னொரு பக்கம் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் மற்றும் கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள எம்எல்ஏக்களில் 7 பேருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மரிய வில்சன் இணைவதும் உறுதியாகி இருக்கிறது. இதனால் விஎஸ் பாபு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் விஎஸ் பாபு அதிருப்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவரை ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் தரப்பு சமாதானம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications