பண்ருட்டி அருகே திடீர், திடீர் என்று தீப்பிடித்து எரியும் வீடுகள்: மக்கள் பீதி
கடலூர்: பண்ருட்டியை அடுத்துள்ள சின்னசேமக் கோட்டையில் கூரைவீடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தீப்பிடிக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்து உள்ளது சின்னசேமக் கோட்டை. அங்கு கடந்த 26ம் தேதி ராமநாதன் என்பவரின் கூரை வீடு திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் நடந்த மறுநாளே அதே பகுதியில் உள்ள கலியபெருமாளின் வீடு மர்மமான முறையில் தீப்பிடித்தது. அவரது வீடு தீப்பிடித்த சமயத்தில் அதற்கு எதிரே இருந்த ராமமூர்த்தி என்பவரின் வீடும் தீப்பிடித்து எரிந்தது.
இப்படி வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிவதற்கு தெய்வகுற்றம் காரணமாக இருக்கலாம் என்று நினைத்த மக்கள் சிறப்பு பூஜை செய்தனர். இந்நிலையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு அப்பகுதியில் உள்ள வீடுகள் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அப்பகுதியில் அடிக்கடி வீடுகள் தீப்பிடிப்பதால் தீயணைப்பு வீரர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். வீடுகளில் தீப்பிடித்தது போக நேற்று மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் தீப்பிடித்தது. அந்த தீ உடனே அணைக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் பத்மாவதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூரைகள் மேல் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றினர். அப்போது மணிகண்டனின் வீட்டில் இருந்து புகை வந்தது. உடனே அந்த கூரை மீது மேலும் தண்ணீர் ஊற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications