பாஜகவை தாக்கக் கூடாது.. கேஜரிவாலுக்கு கிரண் பேடி 'ஆர்டர்'.. முட்டல் மோதல்!
டெல்லி: இதுவரை மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண் பேடி இப்போது வெளிப்படையாகவே அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கும் இன்னொரு குழு உறுப்பினரான அரவிந்த் கேஜரிவாலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
அன்னா ஹசாரே தனது குழுவைக் கலைத்துவிட்டாலும் கேஜரிவால்-பேடி ஆகியோர் தனியாக ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதில், காங்கிரஸ்-பாஜக ஆகிய இரண்டையும் தாக்கி வருகிறார் கேஜரிவால்.
காங்கிரஸ்- பாஜக இரண்டுமே ஊழலுக்குப் பேர் போனவை தான். ஆனால், ஒருவரின் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக அடுத்த கட்சி வழக்குப் போடாது, விசாரிக்காது. சும்மா ஓட்டுக்காக ஊழலுக்கு எதிராக குரல் மட்டுமே கொடுப்பார்களே தவிர, பாஜக செய்த ஊழல்கள் குறித்து காங்கிரஸ் வழக்குப் போட்டு விசாரிக்காது, அதே போல காங்கிரஸ் செய்த ஊழல்கள் தொடர்பாக பாஜகவும் வழக்குப் போட்டு விசாரித்து தண்டித்தது இல்லை. இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உதவி வருகின்றனர் என்று கூறும் கேஜரிவால் இரு கட்சிகளையும் எதிர்க்க வேண்டும் என்கிறார்.
ஆனால், பாஜகவைக் குறை கூறக் கூடாது என்று கிரண் பேடி கூறி வருகிறார். காங்கிரஸை மட்டுமே தாக்கிப் பேச வேண்டும் என்கிறார். காரணம், பாஜகவின் ஆதரவு நமக்குத் தேவை என்பது கிரண் பேடியின் வாதமாகும்.
ஆனால், இதை கேஜரிவால் ஏற்க மறுப்பதால் அவர் நடத்தும் போராட்டங்களை கிரண் பேடி புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டின் முன்பும், பாஜக தலைவர் நிதின் கட்காரியின் வீட்டின் முன்பும் கேஜரிவால் நடத்திய போராட்டங்களில் கிரண் பேடி பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications