''ஐ ஈட் இங்கிலீஷ்.. ஐ வாக் இங்கிலீஷ்''.. நாட்டில் 5ல் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியுமாம்!:
டெல்லி: நாட்டில் 5 பேரில் ஒருவர் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கூறியுள்ளார். பெண்களை விட ஆண்கள் தான் தனக்கு இங்கிலீஷ் தெரியும் என்று அதிகமாகக் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் என்டிடிவி நடத்திய சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நாட்டின் மாபெரும் தலைவர்கள் யார் என்ற கேள்விக்கு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய், சுபாஷ்சந்திர போஸ் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமா என்ற கேள்விக்கு 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வரதட்சணைக்கு ஹரியாணா முழு ஆதரவு!!:
மகளின் திருமணத்துக்கு வரதட்சணை வழங்குவீர்களா என்ற கேள்விக்கு ஹரியாணாவில் 94 சதவீதம் பேர் ஆமாம் என்று பதிலளித்துள்ளனர். இந்த மாநிலத்தில் பெண் குழந்தைகள் சிசுப் படுகொலை மிக அதிகம் என்பதும், ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை விகிதம் நாட்டிலேயே மிக மிகக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான மனப்பான்மை அதிகம் கொண்ட இந்த மாநிலத்தில் வரதட்சணை கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் பெரும் ஆதரவான நிலை நிலவுகிறது.
இந்த விஷயத்தில் உத்தரப் பிரதேதம் இரண்டாவது இடத்திலும், மத்தியப் பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளன.
நாட்டில் 5ல் ஒருவருக்கு இங்கிலீஷ் தெரியுமாம்!:
ஆங்கிலம் படித்தால் வேலைவாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு நாடு முழுவதும் 87 சதவீதம் பேர் ஆமாம் என்று பதிலளித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் நாட்டில் 5ல் ஒருவர் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கூறியுள்ளனர், குறிப்பாக ஆண்கள்.
நாட்டிலேயே மிகக் குறைவான ஆங்கில அறிவு உள்ள மாநிலங்கள் ஜார்க்கண்ட் (14 சதவீதம் மட்டுமே ஆங்கிலம் அறிந்தவர்கள்), குஜராத் (21%), மத்தியப் பிரதேசம் (22%) ஆகியவை தான் என்பதும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரியங்கா காந்தி அரசியலுக்கு வர வேண்டுமா என்ற கேள்விக்கு 65 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் தான் மிக அதிகபட்சமாக 80 சதவீதம் பேரும் தென் மாநிலங்களில் 53 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா ஓகே... பாகிஸ்தான் வேண்டாம்:
இந்தியா, அமெரிக்காவுக்கு ஆதரவான நாடாக இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்றும், 16 சதவீதம் பேர் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 43 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 57 சதவீதத்தினர் பாகிஸ்தானுடன் நட்புறவு தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
பாகிஸ்தானுடன் நட்புறவு தேவையில்லை என்று கூறும் மாநிலங்களில் மகாராஷ்டிரம் தான் முன்னிலையில் உள்ளது. அங்கு 80 சதவீதம் பேர் பாகிஸ்தானுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக மத்தியப் பிரதேசமும் (75%), மூன்றாவது இடத்தில் உத்தரப் பிரதேசமும் (72%), அடுத்த இடத்தில் குஜராத்தும் (69%) உள்ளன.
பாகிஸ்தானுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்று ஹரியாணாவில் தான் அதிகம் பேர் (80%) கருத்துத் தெரிவித்துள்ளனர். கேரளாவில் 77 சதவீதத்தினரும், பஞ்சாபில் 72 சதவீதம் பேரும், டெல்லியில் 66 சதவீதம் பேரும் பாகிஸ்தானுடன் நட்புறவு தேவை என்று வாக்களித்துள்ளனர்.
எக்காரணம் கொண்டும் தீவிரவாதிகளுக்குப் பணிந்துவிடக் கூடாது என்ற நிலைக்கு 84 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மாநில அரசை விட மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக 69 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications