பள்ளி மாணவனை பலிகொண்ட பத்மாசேஷாத்ரி பள்ளி நீச்சல்குளம் சட்டவிரோதமானது - சென்னை ஹைகோர்ட்
சென்னை: பள்ளி மாணவனை பலி கொண்ட பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூடத்தின் நீச்சல்குளம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை கே.கே. நகர் பத்மாசேஷாத்ரி பள்ளியில் கடந்த 16-ந் தேதியன்று மாணவன் ரஞ்சன் என்பவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தான். இச்சம்பவத்தில் பள்ளியின் முக்கிய நிர்வாகி ஒருவரைத்தான் கைது செய்திருக்கிறது போலீஸ். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசுத் தரப்பில் வெங்கடேஷ், பள்ளித் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் எம்.ராதாகிருஷ்ணன், விஜயநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
நீச்சலை கட்டாய பாடமாக பள்ளிகளில் வைக்க முடியுமா? என்று நீதிமன்றம் எழுப்பி இருந்த கேள்விக்கான பதிலை, சி.பி.எஸ்.இ. வாரியம் தாக்கல் செய்துள்ளது. அதில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஒரு பள்ளியை இணைப்பதற்கான விதியில், நீச்சலை ஒரு பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் கல்விசாரா பயிற்சியாக பள்ளிகள் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த பள்ளி கட்டிடத்துக்கான அனுமதி கேட்டு 23.2.89 அன்று தமிழக அரசிடம் பள்ளியின் அறக்கட்டளை விண்ணப்பித்தது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில், பிரச்சினைக்குரிய நீச்சல் குளத்தை அவர்கள் காட்டவில்லை . ஆனால் விண்ணப்பித்த திட்டத்துக்கு மாறாக நீச்சல் குளத்தை கட்டியுள்ளனர் . நீச்சல் குளத்தை கட்டிவிட்டு அங்கீகாரம் கேட்டதால் அதை தமிழக அரசு ஏற்காமல் 29.3.10 அன்று நிராகரித்து உத்தரவிட்டது. திட்ட அனுமதி பெறாமல் நீச்சல் குளம் கட்டி, அதை பயன்பாட்டுக்கும் விடுவது சட்டவிரோதமானது. அந்த நீச்சல் குளம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதத்தில் ஏதாவது தவறு இருப்பதாகத் தெரிந்தால் அந்த நீச்சல் குளத்தை இடிப்பதற்கு கோர்ட்டு உத்தரவிடத் தயங்காது. போலீஸ் விசாரணை இன்னும் முடியவில்லை என்று அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்டுக் கொண்டதால் 4 வாரங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. விசாரணை முடிவில் தெரிய வரும் குற்றச்சாட்டின் தன்மைக்கு ஏற்ப, சட்டப்பிரிவுகளை போலீசார் மாற்றவோ, கூட்டவோ செய்யலாம் என்று அதில் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications