ஓய்வதியத்தை சீக்கிரம் தர ரூ.3 ஆயிரம் கேட்ட பெண் அதிகாரி சிக்கினார்
வேலூர்: வேலூரில் ஓய்வூதியத்தை விரைவாக அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் சத்துணவு மேலாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்பனகுண்டா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் சூரியகுமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வு பெற்றார். எனவே தனது ஓய்வூதியத்தை பெற சூரியகுமார் முயற்சி செய்து வந்தார்.
இதற்காக நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக சத்துணவு மேலாளராக பணியாற்றி வரும் சாரதா(55)வை அணுகினார். அப்போது ஓய்வூதியம் பெற தேவையான தனது ஆவணங்களை அளித்த சூரியகுமார், தனது ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
சூரியகுமாருக்கு ஓய்வூதியம் விரைவில் கிடைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு சாரதா கேட்டுள்ளார். ஆனால் தன்னால் அவ்வளவு பணத்தை தர முடியாது என்று சூரியகுமார் பேரம் பேசி ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார்.
ஆனால் ஓய்வூதியம் பெற லஞ்சம் கொடுக்க விரும்பாத சூரியகுமார், இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சாராவிடம், சூரியகுமார் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய சாராவை கையும், களவுமாக பிடித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
