நாகலாந்தில் இரு இனக்குழுவினரிடையே மோதல் அபாயம் - ராணுவம் கொடி அணிவகுப்பு
கோகிமா: நாகலாந்தில் நாக இனக்குழுக்களிடையே மோதல் ஏற்படும் சூழலால் அங்கு ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியிருக்கிறது.
அசாம் மாநில எல்லையையொட்டி இருக்கிறது நாகாலாந்தின் திமாப்பூர். இங்கிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது நாகாலாந்து மாநில தலைநகரான கோஹிமா. கோஹிமாவில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியதாக சுமி இனத்தைச் சேர்ந்த கிவிகா அசுமி என்பவரை அங்காமி இனக்குழுவினர் அடித்து தாக்கியதில் உயிரிழந்துவிட்டார். இச்செய்தி பரவியதையடுத்து இரு இனக்குழுவினரிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.
கோஹிமாவைப் பொறுத்தவரை அங்காமி இனக்குழுவினர் அதிகம் வாழும் இடம். திமாப்பூரில் அங்காமி இனத்தவர் குறைவு. இதனால் திமாப்பூரில் அங்காமி இனத்தவர் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. அங்காமி இனத்தவருக்கு சொந்தமான நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாகாலாந்து முதல்வர் நெய்பூ ரியோவுக்கு சொந்தமான ரிசாட்டும் தாக்குதலுக்குள்ளானது. முதல்வர் ரியோ அங்காமி இனக்குழுவைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும் அமைதியை கடைபிடிக்குமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இப்பொழுதுதான் அசாம் இன மோதல் சுமார் 100 பேர் வரை பலி கொண்டிருந்த நிலையில் நாகாலாந்திலும் அப்படியொரு நிலை வெடித்துவிடக் கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக இன்று காலை திமாப்பூரில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications