கிழக்கு டெல்லியில் கலவரம்: ஒருவர் பலி, 20 வாகனங்கள், பெட்ரோல் பங்கிற்கு தீ
டெல்லி: கிழக்கு டெல்லியில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார், 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் 20 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள மயூர் விகார் பகுதியில் நேற்று மதியம் பைக்கில் 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் ஹெல்மெட் அணியாததால் போலீசார் அந்த பைக்கை தடுத்து நிறுத்தியுள்ளனர். குடிபோதையில் அந்த வாலிபர்கள் இருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த வாலிபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே அவர்கள் பைக்கில் அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்த போலீசார் லத்தியைத் தூக்கி எறியவே அது பைக்கில் இருந்து ஒருவர் மீது பட்டு அவர் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது.
ஆனால் சிக்னலில் நிற்காததால் அந்த வாலபரை போலீசார் தான் அடித்து படுகாயமடையச் செய்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர். காயமைடந்த வாலிபர் சிகிச்சைக்காக லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலமை மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து கூடிய மக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் காவல் நிலையம், சோதனைச்சாவடி, பல வாகனங்கள், டெல்லி மாநகரப் பேருந்து, பெட்ரோல் பங்க் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர். இதில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கலவரக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து கிழக்கு டெல்லி துணை கமிஷனர் பிஎம் மிஸ்ரா கூறுகையில்,
இந்த கலவரத்தில் காயமடைந்தவர்கள் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் என்னை தொடர்பு கொண்டு கூறுகையில், ஒரு வாலிபருக்கு தோளில் அடி, ஒரு பிரேதமும் வேறு கிடந்தது. காயமடைந்த 5 போலீசார் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு குண்டு பாயந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமான அந்த வாலிபரை போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர் என்று அவர் தெரிவி்த்தார் என்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து 1,600 போலீசார் மயூர் விகார் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மயூர் விகார் பகுதிக்கு செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸுகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இரவு 10.30 மணிக்கு பிறகே நிலமை கட்டுக்குள் வந்ததாக போலீசார் தெரிவி்த்தனர். ஆனால் கோடா காலனியில் போலீசார் மீது அவ்வப்போது கற்கள் வீசி தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications