நிலக்கரி சுரங்க ஊழல்- தாசரி நாரயணராவிடம் சிபிஐ விசாரணை! குடும்பம் குடும்பமாக சிக்குகின்றனர்!

Subscribe to Oneindia Tamil

Dasari and Jayasudha
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் நிலக்கரித்துறை முன்னாள் அமைச்சரும் தமிழ்-தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளருமான தாசரி நாராயணராவை சிபிஐ வளைத்திருக்கிறது. ஹைதராபாத்தில் தாசரி நாரயணராவிடம் சுமார் 3 மணி நேரம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

பிரபல சினிமா தயாரிப்பாளரும் சினிமா இயக்குநருமான தாசரி நாராயணரா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது அரசாங்கத்தில் நிலக்கரித்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஹைதராபாத்தில் விருந்தினர் மாளிகையில் வைத்து தாசரி நாராயணராவிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

நிலக்கரி சுரங்க முறைகேட்டை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மலைத்துப் போகும் அளவுக்கு ஒரு சில குடும்பங்கள் மட்டுமே பல்லாயிரம் கோடி அளவுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஆதாயமடைந்திருக்கின்றனர்.

ஒரே குடும்பத்தின் 3 நிறுவனங்கள்

இதனிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கும் 5 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் ஒரே குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் 10 நகரங்களில் 30 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கும் 5 நிறுவனங்களில் 3 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஜெய்ஸ்வால்ஸ் என்பவரது குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இந்த ஒரே குடும்பத்தினர்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமடைந்திருக்கின்றனர். இந்த ஒரே குடும்பத்தினருக்கு மட்டும் 10 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டு இதன் மூலம் 900 மில்லியன் டன் நிலக்கரி வெட்டிஎடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது

நாக்பூரைச் சேர்ந்தவர் பசந்த் ஜெய்ஸ்வால். இவரது மூன்று மகன்கள் ரமேஷ், மனோஜ் மற்றும் அரவிந்த்.

இதில் ரமேஷ் என்பவர் ஜெய்ஸ்வால் நிகோ குரூப் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இந் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் பசந்த் ஜெய்ஸ்வால்

இந்த ஜெய்ஸ்வால் நிகோ குரூப் நிறுவனத்துக்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 447 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

மற்றொரு மகனான மனோஷ், அபிஜித் குரூப் என்ற நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். இந்த நிறுவனத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 444 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் ஜெய்ஸ்வாலின் மூன்று மகன்களையும் பங்குதாரராகக் கொண்ட ஏஎம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல் என்ற நிறுவனத்துக்கு மகாராஷ்டிராவில் ஒரு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மொத்தமாக இந்த ஜெய்ஸ்வால் குடும்பத்தினருக்கு மட்டும் மொத்தம் 10 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டு 917 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பிரசாத் குடும்பம்

சிபிஐயின் பிடியில் சிக்கியிருக்கும் மற்ற இரு நிறுவனங்கள் நவபாரத் பவர், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட்.

இதில் நவபாரத் பவர் என்பது த்ரிவிக்ரம பிரசாத் மற்றும் ஹரிஷ் சந்திர பிரசாத் ஆகியோருக்கு சொந்தமானது. இவர்கள் பெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை எஸ்ஸார் குழுமத்துக்கு விற்பனை செய்திருக்கின்றனர். இவர்களது பெயரும் எப்.ஐ.ஆரில் உள்ளது.

துல்ஷ்யன் குடும்பம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சிக்கியிருக்கும் குடும்பம் வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனமானது சஞ்சீவ் குமார் துல்ஷயன், பிரசாந்த் துல்ஷ்யன், நிர்மலா துல்ஷ்யன் ஆகியோருக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஒதுக்கீடு பெற்றது. இவர்கள் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் உதவியாளருக்கு இந்த நிறுவனத்தை விற்றிருக்க்ன்றனர்.

எப்.ஐ.ஆரில். காங். எம்.பி குடும்பம்

ஜெய்ஸ்வால் குடும்பத்தினரைப் போலவே இன்னொரு குடும்பமும் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் சிக்கியிருக்கிறது. இந்த குடும்பம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. விஜய் ஜவஹர்லால் தர்தா, அவரது சகோதரரான மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திர ஜே தர்தா அவரது மகன் தேவேந்திரா ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் தேவேந்திரா, ஜெய்ஸ்வால் குடும்ப நிலக்கரி நிறுவனங்கள் ஒன்றில் இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் குடும்பத்தினர் ஆதாயம் அடையும் வகையில் தர்தா குடும்பத்தினர் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் தர்தா குடும்பத்தினர் தவிர ஜெய்ஸ்வால் குடும்பத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் ஜெய்ஸ்வால், மனோஜ் ஜெய்ஸ்வால், ரமேஸ் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. சிபிஐ சோதனை நடத்தியிருக்கும் நவபாரத், மற்றும் வினய் நிறுவனத்தினர் பெயரும் முதல் தகவலலாரிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+