வ.உ.சி.யின் பேரனுக்கு அரசு வேலை அளித்த முதல்வருக்கு நன்றி: ஏ.சி.சண்முகம்
சென்னை: சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் பேரனுக்கு அரசு வேலை வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது என்ஜினீயரிங் கல்லூரியில் வ.உ.சி.யின் பேத்திக்கு இலவசமாக படிக்கவும் உதவி செய்துள்ளார்.
இது குறித்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய திருநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுள் குறிப்பிடத்தக்கவர் வ.உ.சி. அவரது தியாகம் காலத்தால் மறக்க முடியாதது. வெள்ளையர்களுக்கு எதிராக கப்பலோட்டிய அவரது வீரதீர செயல் இன்றும் அனைவராலும் போற்றிப் புகழப்படுகிறது. அந்த ஒப்பற்ற தியாகசீலரின் 3வது மகளான சி.ஆனந்தவல்லியின் பேரனான நெல்லையப்பன் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். அவர் தியாகிகளின் வாரிசு என்னும் அடிப்படையில் வேலை கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.
தியாகிகளை போற்றிக் கொண்டாடி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கவுரவித்து வரும் முதல்வர் ஜெயலலிதா, வ.உ.சி.யின் தியாகத்தை நம் தேசம் என்றென்றும் நினைவுகூறும் வகையில், நெல்லை பொருட்காட்சி திடலில் வ.உ.சி.யின் முழுஉருவச் சிலையுடன் கூடிய எழிலார்ந்த மணிமண்டபத்தை அமைத்து அவரே திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
இந்த நிலையில் தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, வ.உ.சி.யின் பேரன் நெல்லையப்பனின் கோரிக்கை மனுவை கருணையுடன் பரிசீலித்து அவருக்கு தமிழ் வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளராக பணி நியமனம் வழங்கி உள்ளார். வ.உ.சி.யின் குடும்பத்திற்கு செய்துள்ள இந்த பேருதவிக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றி.
நெல்லையப்பனின் மகள் என்.சாய்லட்சுமி +2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் படிக்க முயற்சி செய்வது குறித்து அறிந்தேன். உடனே அவர்களை சென்னைக்கு வரவழைத்து அந்த மாணவி விரும்பியபடி என்ஜினீயரிங் படிப்பை (இ.சி.இ.) டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை கழகத்தில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications