காவிரி ஆணையம் கூடிக் கலைந்தது- பிரதமர் உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடக முதல்வர் வெளிநடப்பு!
டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் நடந்த காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகம் கூறிவிட்டது. இதையடுத்து இந்தக் கூட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா அடுத்த 24 நாட்களுக்கு தமிழகத்துக்கு 48 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டார். இதை பிரதமரும் கர்நாடகத்திடம் வலியுறுத்தினார்.
ஆனால், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறிவிட்ட அம் மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனால் ஜெயலலிதா கலந்து கொண்ட இந்தக் கூட்டம் பெரும் தோல்வி அடைந்தது.
கடந்த 9 ஆண்டுகளாக காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை கூட்டமாலேயே ஏமாற்றி வந்தார் பிரதமர் மன்மோகன் சிங். இந் நிலையில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று இக் கூட்டத்தை நடத்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று இக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா, பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமரின் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா சார்பில் முதல்வர் உம்மன் சாண்டிக்குப் பதிலாக நீர்ப்பாசன அமைச்சர் பி.ஜே.ஜோசப் கலந்து கொண்டார்.
இரண்டரை மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 15 லட்சம் ஏக்கர் சாகுபடிக்காக மேட்டூருக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீர் குறித்து காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அன்று பிறப்பித்த இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியும், மத்திய அரசு வெளியிட மறுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கண்காணிக்கவும் மத்திய அரசு தவறிவிட்டது.
இதுபோன்ற விவகாரத்தில் நீர் ஆதாரம் உள்ள மாநிலத்தில் இருந்து நதிநீர்ப் பங்கீடு செய்ய நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு அலட்சியமாக உள்ளது.
கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடாததால், வழக்கம்போல் இந்த ஆண்டு ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா பயிரை மட்டுமாவது காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையில் தற்போது உள்ள 45 டி.எம்.சி. தண்ணீர் 30 நாட்களுக்கு கூட போதாது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால், ஆணையத்தின் தலைவரான பிரதமரின் முடிவே இறுதியானது.
எனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரை காப்பாற்றவும், தமிழகத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்காகவும், நாள்தோறும் தலா 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் தொடர்ந்து 24 நாட்களுக்கு மொத்தம் 48 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடுவதற்கு கர்நாடக அரசுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் சம்பா சாகுபடியை காப்பாற்ற, வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து, நடுவர் மன்றம் கூறிய முறையை பின்பற்ற கர்நாடகா முன்வர வேண்டும்.
ஆனால், அதை கர்நாடகம் பின்பற்றுவது இல்லை. கர்நாடக அரசின் இந்த செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினசரி 2 டி.எம்.சி. வீதம் 48 டி.எம்.சி. நீரை கர்நாடகா தர வேண்டும் என்றார் ஜெயலலிதா.
ஆனால், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் வழக்கம்போல், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டார்.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை என்றும், மாநிலத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே காவிரி நீரை வினியோகிக்க முடியாத நிலையில் உள்ளோம்.
கடந்த ஆகஸ்ட் வரை மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் 217 டிஎம்சி நீர்வரத்து வந்திருக்க வேண்டும். ஆனால் 102 டிஎம்சி நீர்வரத்தே வந்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 55 சதவீத நீரும் கபினிக்கு 34 சதவீத நீரும்தான் வந்துள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவ மழைக்காலம் சுமார் 15 நாள்களில் முடிந்து விடும். அதன்பிறகு தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக்காலம் அக்டோபரில் தொடங்கும். அந்த மழைக்காலம் தமிழகத்துக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட அளிக்க இயலாத நிலையில் இருக்கிறோம் என்றார் ஜெகதீஷ் ஷெட்டார்.
வேண்டுமானால் மத்திய அரசின் சார்பில் ஒரு குழுவை கர்நாடகத்துக்கு அனுப்பி நிலைமையை நேரடியாக பார்த்துக் கொள்ளலாம் எனறும் கூறினார்.
ஆனால், இந்த யோசனையை ஜெயலலிதா ஏற்கவில்லை. 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீராவது திறந்து விடும்படி ஜெயலலிதா வற்புறுத்தினார். இந்த கோரிக்கையை ஏற்கவும் கர்நாடக முதல்வர் மறுத்துவிட்டார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், காவிரியில் இருந்து புதுச்சேரிக்கு நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 6 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு குறைந்தபட்சம் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக ஜெகதீஷ் ஷெட்டர், ஆணைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல், கூட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது.












Click it and Unblock the Notifications