திருமலையில் கருடசேவை லட்சக்கணக்கானோர் தரிசனம்
திருமலை: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5 -ம் நாளன்று கருட வாகனத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் காலையும், மாலையும் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
விழாவின் 5 வது நாளான சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை மலையப்பசாமி-ஸ்ரீதேவி-பூதேவியுடன் மோகினி அவதாரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) தங்கபல்லக்கில் வீதி உலா வந்தார்.
ஊர்வலத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் அணிவகுத்து சென்றன. பெண்கள், குழந்தைகள் கோலாட்டம் ஆடியபடியும், பாடல்கள் பாடியபடியும், நடனமாடியபடியும் சென்றனர். ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள், கடவுள்களின் அவதாரங்கள், சீனிவாச திருக்கல்யாணம், தசாவதார காட்சிகள், பெருமாளின் பெருமை ஆகியவற்றை விளக்கும் வகையில் வேடமணிந்து சென்றனர்.
சாமி வீதி உலாவை தொடர்ந்து பகல் 11 மணி முதல் 12 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயகி மண்டபத்தில் உற்சவரான மலையப்பசாமி-ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆஸ்தானங்கள் நடைபெற்றன. மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 9 மணி முதல் 1 மணி வரை கருடவாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். அப்போது நான்கு மாட வீதிகளிலும் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை மற்றும் கருடசேவை நிகழ்ச்சி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டிருந்தனர். இதனையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications