குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கை இனி சிபிசிஐடி விசாரிக்கும்: யாரும் தப்ப முடியாதாம்

கடந்த மாதம் 12ம் தேதி நடந்த குரூப் 2 வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்தராவ் உள்பட பலர் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த பாலன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடி வசம் சென்றிருப்பதால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சிபிசிஐடி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு நேற்று இரவு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்த டி.எஸ்.பி. தலைமையில் தனி அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார். ஈரோடு மற்றும் தர்மபுரி போலீசார் தங்கள் விசாரணை விவரங்களை ஒப்படைத்த பிறகு நாங்கள் விசாரணையை துவங்குவோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 24 பேரிடம் மீண்டும் விசாரிக்கவிருக்கிறோம். வினாத்தாள் மோசடியில் தொடர்புள்ள யாரும் தப்பிக்க முடியாது. இதன் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கைது செய்வோம் என்றார்.
குரூப் 2 வினாத்தாளை பணம் கொடுத்து வாங்கி தேர்வு எழுதிய 4,000 பேர் இனி தங்கள் வாழ்க்கையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வே எழுத முடியாது. மேலும் அவர்கள் அரசு பணியாளர் தேர்வுகள் எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications