30 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து: 219 ஆலைகளுக்கு நோட்டீஸ்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 30 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 689 பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, தொழில்துறை, மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை அலுவலர்களைக் கொண்ட 11 குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றன. கடந்த 10ம் தேதி முதல் 22ம் தேதி வரை 249 ஆலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வெடிபொருட்கள் பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த 28 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை கடந்த 21ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்து ஆலைகளின் சல்பர் மருந்து குடோன்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆய்வில் திருவில்லிபுத்தூர் ஜெயராம் பட்டாசு ஆலை, செங்குன்றபுரம் அட்லஸ் பட்டாசு ஆலை ஆகிய 2 ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுவரை 30 ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வெடிபொருள் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 219 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆலைகளில் ஆய்வு தொடர்கிறது.












Click it and Unblock the Notifications