"ஈரோடு மோசடி"யில் புதிய ரகம் அறிமுகம்- அதிகவட்டியின் பெயரில் ரூ32 ஆயிரம் கோடி மோசடி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈமு கோழி, நாட்டுக் கோழி, தேங்காய் கொப்பரை மோசடிகளைத் தொடர்ந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக நேற்று ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க பலரும் குவிந்தனர்.
இதில் விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவையை சேர்ந்த செந்தில், கேரளாவை சேர்ந்த விவேக் கியோர் பைன் பியூச்சர், பெஸ்ட் வே, குட் வே, பைன் இந்தியா ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி வந்தனர். இதில் முதலீடுக்கு 25 விழுக்காடு வட்டி தருவதாக கூறி பரிசுப் பொருட்களை அள்ளி வழங்கினர். ஆனால் கடந்த 3 மாதங்களாக வட்டித் தொகை வரவில்லை. இதனால் என்னிடம் பணம் கொடுத்து முதலீடு செய்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இதனால் செந்தில், விவேக் ஆகியோரிடம் இருந்து எனக்கு பணத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 23 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். விஜயகுமார் ரூ.11 கோடியும், கருப்புசாமி என்பவர் துணை ஏஜெண்டுகள் அமைத்து 10 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.80 கோடியும் வசூல் செய்து கொடுத்துள்ளனர். 23 பேரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரூ.270 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டு உள்ளது.
பணம் கட்டியவர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ஏஜெண்டு பழனிச்சாமி தற்கொலைக்கு முயன்று திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்னொரு ஏஜெண்டு மாரிமுத்துவின் தாயாரை சிலர் கடத்திச்சென்று, பணம் பெற்று உள்ளனர்.
ஈரோட்டில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களிடம் பணம் வசூல் செய்து ரூ.32 ஆயிரம் கோடி வரை மோசடி செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
தலைமறைவாகிவிட்ட செந்தில், விவேக் ஆகியோரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications