தடாலடி பிறந்தநாள்... 'நான் சி.எம்' சவடால்.. மேயருடன் மோதல்.. ஜெயக்குமாருக்கு "ஆப்பு"!

Subscribe to Oneindia Tamil

Jayalalithaa and Jayakumar
சென்னை: தமிழக சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் இன்று ராஜினாமா செய்ததன் பின்னணியில் ஏராளமான சுவராஸ்ய தகவல்கள் இருக்கின்றன.

ஜெயக்குமாரின் ராஜினாமாவுக்கு சொல்லப்படும் காரணங்கள் குறித்து ஒரு பார்வை..

காரணம் 1- பிறந்த நாளில் 'எமகண்டம்':

கடந்த செப்டம்பர் 18ம் தேதியன்று சபாநாயகர் ஜெயக்குமாரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையை மிரட்டின. அதிமுகவைப் பொறுத்தவரையில் பிரமுகர்களாக இருந்தாலும் கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிட நேரிடும் என்பதால் தடபுடலுக்கு எம்.ஜி.ஆர். காலம் முதலே தடை இருந்து வருகிறது. ஆனால் இம்முறை ஜெயக்குமார் மட்டும் அதிரடி ஆட்டம் காட்டியிருக்கிறார். இந்த அதிரடி ஆட்டத்தை ஜெயக்குமார் தரப்பு உற்சாகமாக கொண்டாடினாலும் இங்குதான் அவருக்கு எமகண்டனம் தொடங்கியதாம்

காரணம் 2- அடுத்த சி.எம். சவடால்:

ஜெயக்குமாரின் கண்ணசைவுடன் களைகட்டிய இந்த பிறந்த நாளுக்கு சிறப்புக் காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. ஜெயக்குமாருக்கு தற்போதைய கிரக நிலைப்படி முதல்வராகும் வாய்ப்பு என்று ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிட உன்னிகிருஷ்ண பணிக்கரே சொல்லிவிட்டாராம். இதனால் கனவுலகில் மிதக்கத் தொடங்கினார் ஜெயககுமார் என்கின்றனர். அவரே இப்படி மிதக்கும்போது அடிப்பொடிகள் சும்மா இருப்பார்களா .... செம ஆட்டம் காட்டியிருக்கின்றனர்.

காரணம் 3- மேயர் சைதை துரைசாமியுடன் மோதல்:

இது ஜெயக்குமாரின் விலகலுக்கான காரணமாக சொல்லப்பட்டாலும் வேறு சில தகவல்களும் உண்டு. எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர் சைதை துரைசாமி தற்போது சென்னை மாநகர மேயராக இருக்கிறார். அவருக்கும் ஜெயக்குமாருக்கும் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலினுக்கு ஆதரவான நிலை:

சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதான் ஜெயக்குமாருக்கும் சைதை துரைசாமிக்கும் இடையே மோதல் தொடங்கியிருக்கிறது. அதாவது சைதை துரைசாமி வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயமாக அவர் அமைச்சராகிவிடுவார் என்றும் மீண்டும் சென்னை அதிமுக அவர் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும் என்றும் ஜெயக்குமார் தரப்பு கருதியது. இதனால் மு.க.ஸ்டாலினை எப்படியாவது வெற்றி பெற வைப்பது என்று சில ரகசிய உள்ளடி வேலைகளில் ஜெயக்குமார் தரப்பு ஈடுபட அது கார்டனுக்கும் கசிந்து போய் இருக்கிறது.

அப்போதே சைதை துரைசாமியை கூப்பிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, இதில் தோற்றாலும் கவலைப்படாதீர்கள்.. நீங்கள்தான் மேயர் வேட்பாளர் என்று உறுதி கொடுத்திருக்கிறார். இங்கு தொடங்கிய முட்டல் மோதல் பகிரங்கமாக கடந்த சிலவாரங்களாக வெடித்திருக்கிறது. செப்டம்பர் 18ம் தேதியன்று ஜெயக்குமார் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து சொல்ல மேயர் சைதை துரைசாமி நேரில் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயக்குமாரோ நீண்ட நேரம் துரைசாமியை காத்திருக்க வைத்ததுடன் நேரில் சந்திக்கவும் இல்லையாம். கடைசியில் பொக்கேவை கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இதே நிலைமைதான்!

காரணம் 4- சென்னை மாநகராட்சியில் தகராறு:

இத்துடன் ஜெயக்குமார்- துரைசாமி மோதல் முடிந்து போய்விடவில்லை. சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அண்ணா வளைவு அகற்றம் தொடர்பாக அதிமுக கவுன்சிலர் சந்தானம், மேயர் துரைசாமிக்கு எதிராக கேள்வி கேட்டிருக்கிறார். இது மற்ற அதிமுக உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. துரைசாமியை எதிர்த்து கேள்வி கேட்ட சந்தானம் ஜெயககுமார் ஆதரவாளர் என்றும் ஜெயக்குமாரின் தூண்டுதலிலேயே அவர் பேசினார் என்றும் கூறப்படுகிறது.

மதுசூதனின் பங்கு- ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்:

சைதை துரைசாமி விவகாரம் மற்றும் ஜெயக்குமாரின் பிறந்த நாள் களேபரங்களை கலந்து கட்டி மொத்தமாக அதிமுக அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன்தான் (ஜெயக்குமாரின் பரம எதிரி) விரிவாக ஜெயலலிதாவுக்கு கடிதமாகக் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்தே முதல் கட்டமாக வட சென்னை மாவட்ட தெற்கு செயலாளர் புரசை கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவர்தான் ஏகப்பட்ட போஸ்டர்களை ஜெயக்குமாரை வாழ்த்தி அடித்தவர். இவருக்குப் பதிலாக பாலகங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. புரசை கிருஷ்ணனைத் தொடர்ந்து மேலும் 12 அதிமுகவினரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. இதனால் ஜெயக்குமார் தரப்பு ஆடிப் போனது.

கார்டனில் நேற்று விசாரணை- இன்று கிளைமாக்ஸ்:

இதைத் தொடர்ந்து கடைசியாக நேற்று ஜெயக்குமாரையும் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேலையும் முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்திருக்கிறார்.
ஜெயக்குமார் மீதான புகார்கள், அடுத்த சி.எம். என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, மேயர் துரைசாமியுடனான மோதல் என அனைத்தையும் அக்கு வேறாக ஆணிவேறாக வைத்து ஜெயக்குமாரை வெளுத்து வாங்கினாராம் ஜெயலலிதா. ஜெயக்குமாருக்கு தொண்டரடிப் பொடியாக இருந்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.வெற்றிவேலையும் ஒரு பிடிபிடித்து வாங்கினாராம் ஜெயலலிதா. இருவரையும் ராஜினாமா செய்துவிட்டுப் போகும்படியும் சொல்லிவிட்டாராம்.

வெற்றிவேலின் கட்சி பதவியும் அம்போ?:

இதன் கிளைமாக்ஸ் காட்சியாகத்தான் முதலில் சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் விலகிவிட்டதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அடுத்ததாக வெற்றிவேலிடம் இருக்கும் வடசென்னை மாவட்ட வடக்கு செயலாளர் பதவி பறிப்பு நடக்கப் போகிறதாம்

காரணம் 4- அள்ளிவிடும் ஜெயக்குமார் தரப்புகள்:

இத்தனை தகராறுகள்- உள்ளடிகள்- விசாரணைகள் நடந்தாலும் அதாவது விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியாக ஜெயக்குமார் தரப்பு மற்றொரு செய்தியை கசியவிட்டிருக்கிறது. அதாவது ஜெயக்குமார் எப்போதுமே ஜெயலலிதாவின் விசுவாசி என்றும் தமக்கு அமைச்சர் பதவி கேட்டதால்தான் ஜெயலலிதாவே ராஜினாமா செய்ய சொன்னதாகவும் நிச்சயம் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்..

காரணம் 5- கோபத்தில் விலகினாராம்:

இதேபோல் இன்னொன்றும் சொல்லப்படுகிறது. ஆதரவாளர்கள் பலரையும் அதிமுக மேலிடம் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியதால் ஜெயக்குமார் அதிருப்தியடைந்தாராம்.. தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ஜெயக்குமார் ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. சொல்லலாம்தான்.. கொஞ்சம் பொருந்தச் சொல்லுங்க ரத்தத்தின் ரத்தங்களே!

கதி கலங்கும் கலைராஜன்:

சைதை துரைசாமியுடன் எப்போதும் இறுக்கம் காட்டும் கலைராஜனையும் கார்டன் கவனிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அனேகமாக கார்டனிலிருந்து கலைராஜனுக்கு "அழைப்பு" வரலாம் என்பதால் கதிகலங்கிக் கிடக்கிறாராம் கலைராஜன்

மூச்சுவிட மறுக்கும் அமைச்சர்கள்:

இவ்வளவு ரணகளமாகும்னு தெரியாமப் போச்சே! என்று மூச்சுக் காற்று கூட வெளியே வராமல் அமுக்கி வைத்துக் கொண்டு புலம்புகின்றனராம் சில அமைச்சர்கள். ஏனெனில் ஜெயக்குமாருடன் நெருக்கமாக இருந்த அமைச்சர்கள், அவரது பிறந்தநாள் விழாவுக்கு ஆர்வம் காட்டியவர்கள் லிஸ்ட் ஒன்றும் கார்டனில் ரெடியாகத்தான் இருக்கும். சும்மாவே அம்மா அமைச்சர் பதவியை பந்தாடுகிறவர்கள் என்பதால் அடிவயிறு கலங்கிய நிலையில் அதிமுக அமைச்சர்கள் இருக்கிறார்களாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+