திமுக சார்பில் புதிய அமைச்சர்கள் இல்லை.. இல்லை.. இல்லை: கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,
கேள்வி: மத்திய மந்திசபை விரைவில் மாற்றங்கள் இருக்கும் என்றும், அதன் அடிப்படையில் தி.மு. கழக எம்.பிக்கள் சிலருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்றும் பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றனவே?
பதில்: உங்கள் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டுமென்றால்; மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றம் செய்யப்பட்டாலும், அதில் தி.மு.கழகத்தின் சார்பில் புதிதாக கேபினட் அமைச்சராகவோ, துணை அமைச்சராகவோ யாரும் இடம்பெற மாட்டார்கள் என்பதுதான் என் உறுதியான பதில்.
கேள்வி: சிங்கள ராணுவத்திற்கு எதிராக கிளிநொச்சியில் தமிழர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதாக செய்தி வந்திருக்கிறதே?
பதில்: 2009ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைப் போருக்குப் பிறகு தமிழர் பகுதி முழுவதிலும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. வருகிற 3ம் தேதி நடைபெறவுள்ள "டெசோ'' கலந்துரையாடல் கூட்டத்தின்போது, இதுபோன்ற பிரச்சனைகளையும், கழகத்தின் சார்பில் விரைவில் ஐ.நா. மன்றத்தில் அளிக்கப்படவுள்ள மகஜர் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.
கேள்வி: "விவசாயிகளை ஊக்குவிக்கும் வண்ணம், கூடுதல் ஆதார விலையை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது'' என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? உங்கள் தலைமையிலான அரசு இதனை வழங்கவில்லையா?
பதில்: தமிழக நெல் விவசாயிகளின் நிலை உயர மத்திய அரசு நெல்லுக்கு நிர்ணயிக்கும் விலையுடன் மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மானியம் வழங்கி விவசாயிகளுக்கு எல்லா அரசுகளுமே உதவி வருகின்றன. அந்த வகையில் திமுக ஆட்சியிலே இருந்தபோது, 2008-2009-ல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.930 என நிர்ணயம் செய்தது. கழக அரசு ரூ.1,050 என உயர்த்தியது. 2009-2010-ல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.1,030 என நிர்ணயம் செய்தது. தி.மு.க. அரசு ரூ.1,100 என உயர்த்தியது.
எனவே திமுக ஆட்சிக் காலத்தில் சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 50 ரூபாய் கூடுதலாக வழங்கவும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டதைப் போலத்தான் இந்த ஆட்சியிலும் அறிவித்திருக்கிறார்கள்.
கேள்வி: மின் பற்றாக்குறைக்குக் காரணம் மத்திய அரசு வஞ்சிப்பதுதான் என்று தமிழக மின் துறை அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?
பதில்: தமிழகத்திலே மின் பற்றாக்குறைக்குக் காரணம் கடந்த கால தி.மு.கழக அரசுதான் என்று இதுவரை ஜெயலலிதா நம்மீது குற்றஞ்சாட்டி வந்தார். அதற்கான மறுப்பு விளக்கங்களை ஆதாரங்களோடு நான் அளித்த பிறகு தற்போது அந்தத் துறையின் அமைச்சர் மின் பற்றாக்குறைக்குக் காரணம் மத்திய அரசு வஞ்சிப்பது தான் என்று சொல்லியிருக்கிறார்.
அந்தத் துறையின் அமைச்சரான இவராவது டெல்லி சென்று, மத்திய மின் துறை அமைச்சரைக் கேட்டிருக்கலாம் அல்லவா? அதை விட்டு விட்டு, இங்கேயே இருந்து கொண்டு கடந்த கால தி.மு.கழக அரசையும், மத்திய அரசையும் குறை கூறிக்கொண்டிருந்தால் மின் பற்றாக்குறை போய்விடுமா? கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் இதுவரை மின்வாரியத் தலைவராக நான்கு பேரை மாற்றியிருக்கிறார்கள். எதிர்க் கட்சியினரைப் பார்ப்பதைப் போலவே அதிகாரிகளையும் கருதி, அவர்களைப் பழி வாங்கி பலிகடாவாக்க எண்ணுவது சரியல்ல.
கேள்வி: காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டுமென்று கூறியதை ஏற்க மறுத்த கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறதே?
பதில்: தற்போது உச்ச நீதிமன்றமே பிரதமர் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தின் போது தெரிவித்தவாறு, வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீரை வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ள நிலையில், அன்றைக்கே அந்த 9,000 கன அடி தண்ணீரை வாங்க ஒப்புக் கொண்டிருந்தால், உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் முடிவினைப் பாராட்டி, தமிழகத்தின் கோரிக்கையை முழுமையான அளவில் பரிசீலிக்க உதவிகரமாக இருந்திருக்கும் அல்லவா?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications