கூண்டோடு காலி! சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1,000 பேர் அதிமுகவில் இருந்து விலகல்.. சென்னையில் முழக்கம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று விலகல் கடிதங்களை அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டதில் இருந்து இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

edappadi palaniswami aiadmk cv shanmugam

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி, சட்டப் பேரவையில் தவெக அரசருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக, அவர்களின் கட்சிப் பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து, பதவி பறிக்கப்பட்டவர்களில் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் தவிர மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கடிதம் வழங்கியதால் அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. சி.விஜயபாஸ்கர், தவெகவில் இணைந்தார். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இதுவரை அதிமுகவில் இருந்தும் விலகவில்லை.

இந்நிலையில், புதிய மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்டம் முழுவதும் நடத்திய செயல்வீரர்கள் கூட்டங்களுக்கு சி.வி. சண்முகம் தரப்பினருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் உச்சமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சண்முகம் தரப்பினர் மண்டபத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதியின் கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளானது.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், நீக்கப்பட்ட நிர்வாகிகள் திண்டிவனம் விருந்தினர் மாளிகை எதிரே ஒன்றுகூடி, "எங்களை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு நன்றி" என்று கூறி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் விலகல் கடிதம் அளிக்க ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட்டனர். பேருந்துகள் மற்றும் கார்களில் நிர்வாகிகள் சென்னைக்கு கிளம்பினர்.

சென்னைக்கு வருகை தந்து, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். அங்கு, அதிமுகவில் தாங்கள் வகித்து வந்த கட்சி பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாகக் கூறி தங்களது ராஜிநாமா கடிதத்தையும், அதிமுக உறுப்பினர் அட்டைகளையும் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் வைத்து கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பலமுறை ஆட்சி அமைத்த அதிமுக தற்பொழுது தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மாற்ற வேண்டும் என்றும், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி அழித்துவிட்டார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள், அதிமுகவில் இருந்து விலகுவதாக 1,150 பேரின் விலகல் கடிதத்தை அவர்களின் சார்பில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினருமான அர்ஜுனன், விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க முற்பட்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அங்கு இல்லாததால், அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் விலகல் கடிதத்தை வழங்கிச் சென்றனர்.

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளதால், அதிமுக கட்சி வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய நிலையில், தற்போது வரை அவர் மாற்றுக்கட்சிக்கு செல்வது பற்றி அறிவிக்கவில்லை. அவர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+