ரூ.2 கோடி மோசடி: டிவிஎஸ் நிறுவன அதிகாரி கைது
சென்னை : டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தரம் பாஸ்டனர் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர் பொய் கணக்கு காட்டி 2 கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சுந்தரம் பாஸ்டனர்ஸ் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் ராஜகோபாலன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது :
ரூ. 2 கோடி மோசடி
எங்கள் கம்பெனியில் சீனியர் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய வெங்கடேசன்(வயது 51) என்பவர் பல்வேறு வழிகளில் கம்பெனி பணத்தை மோசடி செய்துள்ளார். கம்பெனிக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள் வாங்கியதிலும், பிரிண்டிங், விளம்பரம் போன்றவற்றிற்கான செலவினத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.59 கோடி சுருட்டி உள்ளார்.
மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணப்படியிலும் போலியான கணக்கு காட்டி ரூ.42 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். மொத்தம் அவர் ரூ.2 கோடி அளவுக்கு கம்பெனி பணத்தை மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி கைது
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஸ்ரீதரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணை முடிவில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications