தனது கட்சியில் சேருமாறு எங்களை அழைத்தார் கேஜ்ரிவால் - உதயக்குமார்

இதுதொடர்பாக சுப. உதயக்குமார் அளித்துள்ள பேட்டி
போராட்ட களத்தில் தாங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?
இந்த போராட்டத்தின் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். பலர் சொல்வதை பொறுமையாக கேட்க கற்றுக் கொண்டேன். சாதாரண மக்களுக்கும் ஒரு கருத்து உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். பிரச்சனைகள் எப்படி எழுகின்றது, அதை எப்படி கையாள்வது என தெரிந்து கொண்டேன். பல விதமான மக்களை மக்களின் முகங்களை பார்த்தேன். அவர்களுடன் பேசினேன். அவர்களது கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டேன். குறிப்பாக சகிப்புதன்மையை கற்றுக் கொண்டேன்.
அடுத்த கட்ட பேராட்டம் என்ன?
கூடங்குளம் போராட்டம் தமிழகம் மட்டும் சார்ந்த பேராட்டம் அல்ல. தேசிய அளவிலான பேராட்டம். ஏன் உலக அளவில் இந்த போராட்டத்திற்கு ஆதரவும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. பொது மக்கள் ஆதரவும் பெரிகிக் கொண்டே இருக்கின்றது. அடுத்த கட்ட பேராட்ட கள வடிவம் குறித்து விரைவில் அறிவிப்போம்.
உங்கள் போரட்டத்திற்கு கேரளா முதல்வர் அச்சுதானந்தன் ஆதரவு தெரிவித்துள்ளாரே?
இந்த போராட்டத்திற்கு கேரளா முதல்வர் அச்சுதானந்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சார்ந்துள்ள கட்சியில் சிலர் இந்த போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுகின்றேன்.
கூடங்குளம் போராட்ட களத்தில் போலீஸ் ஐ.ஜி. ராஜேந்திரதாஸ் -ன் துப்பாக்கி காணாமல் போய்விட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். போராட்டம் நடந்தது 10 ம் தேதி. இப்போது 20 நாள் கழித்து அதை கூறுவதன் நோக்கம் எனக்கு தெரியவில்லை. எங்கள் மக்கள் யாரும் அது போல செய்யக் கூடியவர்கள் அல்ல. ஆனால் போலீஸ் ஏன் இப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை. ஒரு வேளை பழிவாங்கும் நடவடிக்கையாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.
கூடங்குளம் போராட்டதின் போது நீங்கள் சரண் அடைவதாக இருந்த நேரத்தில் தான் சமூக சேவகர் அரவிந்த் கேஜ்ரிவால் உங்களை சந்தித்தார். ஆனால் நீங்கள் சரண்டயவில்லை. பேராட்ட கள பாதையே மாறியது. இந்த நிலையில் அவரது வருகை உங்கள் போராட்டத்திற்கு எந்த அளவு பயன் உள்ளதாக அமைந்தது ?
எங்களது போராட்டத்திற்கு சமூக சேவகர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது முழு ஆதரவை தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் புதிய கட்சி துவங்க உள்ளதாகவும். அதில் எங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நாங்கள் எந்த கட்சியிலும் இணைய விரும்பவில்லை என்று கூறிவிட்டோம். போராட்டத்தில் மட்டுமே தற்போது எங்கள் கவனம் உள்ளதாக அவரிடம் தெரிவித்துவிட்டோம்.
போராட்டதின் போது பாதிக்கப்படும் பொது மக்களுக்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உங்கள் தரப்பில் தண்டோரா போடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. அந்த தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட்டீர்களா?
இதை நாங்கள் எப்போதும் சொன்னதில்லை. இதை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வேண்டும் என்றே தீய நோக்கில் பரப்பிவிட்டனர். இது தான் இந்த வதந்தி பரவ காரணமாக அமைந்து வி்ட்டது. இதை நான் முழுமையாக மறுக்கின்றேன்.
போராட்டத்தி்ன் போது துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கடலில் இறங்கி போராடும் போது ஒருவரும் என இருவர் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு மாநில அரசு வழங்கிய உதவியை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
துப்பாக்கிச் சூட்டில் பலியான சகாயம் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் அரசு சார்பில் கொடுத்தாக தகவல் கிடைத்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் , அவருக்கு அந்த அதகாரத்தை கொடுத்தது யார், தவறு செய்த அதிகாரி யார், அவருக்கு அரசு என்ன தண்டணை கொடுத்தது என எந்த தகவலும் இல்லை. தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நிச்சயமாக நீதி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் அதற்கான போராட்டத்திலும் நாங்கள் ஈடுபடவேண்டி இருக்கும்.
உங்கள் போரட்டத்தில் உள்ள நியாயத்தை மத்திய அரசும், மாநில அரசும் ஏன் நீதி மன்றம் கூட ஏற்க மறுத்துவிட்டதே. இந்த நிலையில் அடுத்து என்ன செய்யப் போகின்றீர்கள்?
கூடங்குளம் அணு உலை விவகாரத்தை பொறுத்தவரை பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். அதனால் தான் அவர்கள் தெருவுக்கு வந்து உயிரைப் பணயம் வைத்து போராடுகின்றார்கள். இந்த போராட்டம் தேவையா இல்லையா என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது நீதி மன்றமோ முடிவு செய்ய முடியாது. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அப்படி என்றால் உங்கள் தரப்பு நீதி மன்றத்தை ஏன் நாடிச் செல்ல வேண்டும்?
நாங்கள் நேரடியாக நீதி மன்றத்தை நாடிச் செல்லவில்லை. எங்கள் போரட்டத்தை ஆதரித்த பூவூலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தான் நீதி மன்றத்தைச் நாடி சென்றனர். எங்களுக்கு மற்ற மன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்கள் மன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளோம். மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. எங்களது உணர்வுகளை யாரும் புறம் தள்ள முடியாது. இந்த நாட்டில் ஜனநாயக படுகொலை நடந்து விட்டது. அதை மீட்போம். எனவே இறுதியில் மக்கள் போராட்டமே வெல்லும்.
தாங்கள் போலீருசாருக்கு பயந்து தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகின்றதே?
நான் அணு போராட்டம் குறித்து ஒவ்வொரு நாளும் நான் பல்வேறு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்து வருகின்றேன். நான் இப்போதும் கூத்தன்குளியில் தான் தங்கியுள்ளேன். எங்கும் பயந்து ஓடிவிடவில்லை. நான் பயந்து ஓட என்ன கொலை செய்தேனா, கொள்ளை அடித்தேனா, என்ன தவறு செய்தேன். எந்த தவறும் செய்யவில்லை. மக்களுக்காக போராடி வருகின்றேன். நிராயுதபாணியாக நிற்கின்றேன். யார் வேண்டும் என்றாலும் என்னை சந்திக்காலம் என சவாலாக முடித்தார் உதயக்குமார்.












Click it and Unblock the Notifications