புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்
சென்னை: புதுசேரியில் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்து உள்ளாட்சி பிரதிநிதிகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியுடன் முடிவடைந்தது.
ஆனால் அடுத்த உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரி மாநில சிபிஎம் கட்சி செயலாளர் பெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது அரசு தரப்பில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று நீதிமன்றம் 6 மாத காலம் அவகாசம் வழங்கியது. ஆனால் கால அவகாசம் வழங்கிய 6 மாதத்தில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதையடுத்து பெருமாள் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால் புதுவை அரசு மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டது. அது மட்டுமில்லாமல் தேர்தல் நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையராக, கவர்னரின் செயலாளராக இருந்த உதிப்தரே நியமிக்கப்பட்டார்.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையே நீதிமன்றம் விதித்திருந்த 6 மாத கெடு கடந்த மாதம் 14ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தல் நடத்த மேலும் 5 மாதம் கால அவகாசம் கேட்டு புதுச்சேரி அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகேசன், மேலும் 5 மாத காலம் அவகாசம் கேட்டார். இதற்கு பெருமாள் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், புதுவை அரசு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் புதுச்சேரி அரசு 5 மாத காலம் அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications