கோவை: ப்ரீகேஜி மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது வழக்கு!
கோவை: 3 வயதேயான ப்ரீகேஜி மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர்.
கோவை பீளமேட்டைச் சேர்ந்த பிரகாஷ் ராவ் என்பவரின் மகள் ஸ்ரீநிதி. 3 வயதான இக்குழந்தை அங்குள்ள பள்ளி ஒன்றில் ப்ரீகேஜி படித்து வருகிறாள். நேற்று பள்ளிக்குப் போய் விட்டு திரும்பிய குழந்தையின் சீருடையை அவளுடைய தாயார் மாற்றியபோது ஸ்ரீநிதி அழத் தொடங்கினாள். இதையடுத்து பதறிப் போன தாயார், என்ன ஏது என்று கேட்டபோது தனது ஆசிரியை தனம் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளாள் குழந்தை.
வீட்டுப் பாடம் எழுதாமல் போனதால் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரம்பால் அடித்ததால், குழந்தையின் கை, முதுகில் தடம் விழுந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநிதியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்றனர். ஆனால் பள்ளியில் யாரும் இல்லை, அனைவரும் போய் விட்டனர்.
மேலும் ஸ்ரீநிதியை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக பீளமேடு போலீஸில் புகார் கொடுத்தார் தந்தை பிரகாஷ் ராவ்.
புகாரைப் பதிவு செய்த போலீஸார் ஆசிரியை தனம் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து கல்வித்துறை சார்பிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications