ஐக்கிய அரபு எமிரேட்டில் பாஸ்போர்ட் புதுப்பிக்க கட்டணம் உயர்வு

இது குறித்து அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியர்களின் பாஸ்போர்டை புதுப்பிக்க (சாதாரண முறையில்) கட்டணம் 150 திர்ஹத்தில் இருந்து 285 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல்(அவசர காலம்) முறையில் பாஸ்போர்டை புதுப்பிக்க 700 திர்ஹம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 855 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 60 பக்கம் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் விண்ணப்பிக்க 40 திர்ஹம் பதிலாக தற்போது 95 திர்ஹம் வசூலிக்கப்பட உள்ளது.
சேதமடைந்த, தொலைந்து போன அல்லது திருட்டு போன பாஸ்போர்டை புதுப்பிக்க 505 திர்ஹத்திற்கு பதிலாக 570 திர்ஹம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் புதுப்பிக்க தற்போது சுமார் 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கட்டண உயர்வை குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து சமூக பணியாளர் சம்ஷீர் சிங் என்பவர் கூறியதாவது,
அரபு நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள், சொந்த குடும்பங்களை விட்டு தொலை தூரத்தில் வசித்து வருகின்றனர். ஏற்கனவே அவர்களிடம் இருந்து வரி என்ற பெயரில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாஸ்போர்ட் புதுப்பிக்கும் கட்டணமும் உயர்த்தப்பட்டால், இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications