அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது!
சென்னை: மருத்துவகல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாகவும், அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமம் போஸ்டல் ஆடிட் காலனியைச் சேர்ந்த தினகரபாண்டியன். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 13-ந் தேதி அன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு பத்மா என்ற பெண் தன்னை சந்தித்து தனக்கு அரசு வட்டாரத்தில் பெரிய அதிகாரிகளிடமும், கல்லூரிகள் வட்டாரத்திலும் தனக்கு நிறைய பழக்கம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
தேவையான பணத்தை கொடுத்தால் தன்னால் யாருக்கும், எந்த வேலையும், எந்த கல்லூரியிலும் சீட்டு வாங்கித்தர முடியும் என்றும் அவர் சொன்னார். அவரது பேச்சை நம்பி எனது நண்பர் மணிமாறனின் மகனுக்கு வி.ஏ.ஓ.வேலைக்காக அணுகினோம்.
லட்சக்கணக்கில் பண மோசடி
அவர் வி.ஏ.ஓ. வேலை வாங்கித்தருவதற்காக ரூ.10 லட்சம் கேட்டார். நாங்கள் அதை தர ஒப்புக் கொண்டு, ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்தோம். அப்போது பத்மாவின் நெருக்கமான கூட்டாளி சலீம் அகமது உடன் இருந்தார். ஆனால் சொன்னபடி வி.ஏ.ஓ.வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டனர். அவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் பணத்தையும் திருப்பித்தரவில்லை. பணத்தைகேட்ட போது, பத்மாவும், சலீம் அகமதுவும் எங்களை மிரட்டினார்கள். அவர்கள் இருவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீது வழக்குப் பதிவு செய்த வட பழனி போலீசார் திங்கட்கிழமை காலையில் பத்மாவையும், சலீம் அகமதுவையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இது போன்ற மோசடி புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரிய வந்தது.
மருத்துவ சீட்டு மோசடி
டாக்டர் ஆதி என்பவரின் மகனுக்கு மருத்துவ கல்லூரிசீட் வாங்கித்தருவதாக ரூ.25 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஜெயிலுக்கு போனார்கள். ஜாமீனில் வந்துள்ள அவர்கள், மீண்டும் இருவரும் கூட்டணி அமைத்து கூட்டு மோசடியில் இறங்கி விட்டனர். மும்பையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவரிடமும் இதுபோல் ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கைவரிசை
கோவை உள்பட தமிழகம் முழுவதும் இதுபோல் பலரிடம் லட்சக்கணக்கில் வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர். முதல்-அமைச்சர் பெயரையும் தங்களது மோசடி தொழிலுக்கு பத்மா தவறாக பயன்படுத்தி உள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.
பிடிபட்ட சலீம் அகமது ஏற்கனவே விபசார வழக்கிலும் ஜெயிலுக்குப்போய் வந்துள்ளார். இவர்கள் இருவரிடமும் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரிடம் இருந்து 5 செல்போன்களையும், ரூ. 3.23 லட்சம் ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருவரும் நேற்று நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications