மழைக்கு சென்னையில் ஒருவர் பரிதாப மரணம் - நெல்லை, தூத்துக்குடியில் 6 பேர் பலி
சென்னை: மழை காரணமாக அறுந்து கிடந்த மின்சார வயரில் கால் வைத்த சென்னை நபர் ஒருவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 40 வயதாகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்தார். இன்று காலை தனது அக்காள் மகனை கல்லூரிக்கு அனுப்புவதற்காக கையில் குடையுடன் போய்க் கொண்டிருந்தார். அப்போது, பஸ் நிறுத்தம் அருகே தேங்கிக் கிடந்த தண்ணீரில் காலை வைத்தபோது, அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரில் கால் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்.
தனது தாய்மாமன் மின்சாரம் தாக்கி துடித்ததைப் பார்த்து மணிகண்டன் அலறித் துடித்தார். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. அக்கம் பக்கத்தினரும் கூட கூடி ரமேஷை காக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
மின் இணைப்பைத் துண்டிக்க மின்வாரியத்திற்குப் போன் செய்தால் யாருமே போனை எடுக்கவில்லை. இதனால் ரமேஷ் பரிதாபமாக நடு ரோட்டில் உயிரிழந்து போனார். அநியாயமாக ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைப் பார்த்து பலரும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
நெல்லை, தூத்துக்குடியில் 6 பேர் பலி
இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழைவாய், அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டை, தென்காசி, குற்றாலம், சேரன்மாதேவி, அம்பை, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, வடக்கன்குளம், காவல்கிணறு, பழவூர், திசையன்விளை, உவரி, நாங்குநேரி, கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், இடைகால் ஆகிய பகுதிகளில் நேற்று பிற்பகல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மேலும், குற்றால மலைப் பகுதிகளில் பலத்தமழை பெய்ததால் ஐந்தருவி மற்றும் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு எற்பட்டதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து குறைந்ததால் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி பலி
நெல்லை மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 பேர் இறந்தனர். நெல்லை அருகே உள்ள பாலாமடையை சேர்ந்த முருகன் (45), குளம் ஒன்றில் தனது நண்பரான 55 வயது நடராஜனுடன் குளித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி படுகாயமடைந்தார். அதில் முருகன் உயிரிழந்தார். நடராஜன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல புளியங்குடி நடுத்தெருவை சேர்ந்த மாரியப்பன் (26) வடமலாபுரத்தில் இருந்து நகரம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பலியானார்.
3 மாடுகள் பலி
திசையன்விளை அருகே உள்ள ஏறாந்தை கிராமம் ராஜீவ் நகரை சேர்ந்த அழகுமுத்து என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள், கீரைக்காரன்தட்டை பகுதியை சேர்ந்த சுடலைக்கண் என்பவரின் ஒரு பசுமாடு என 3 மாடுகள் மின்னல் தாக்கி இறந்தன.
இடி விழுந்த அதிர்ச்சியில் பாட்டி பலி
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை அடுத்த காந்தலூரை சேர்ந்தவர் சாமி அய்யா. இவருடைய மனைவி கோவிந்தம்மாள். 60 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று காந்தலூர் பகுதியில் உள்ள வயல் பகுதியில், அவர் மாடு மேய்க்க சென்றார்.அந்த சமயம் பயங்கர இடி, மின்னலுடன் மழை கொட்ட தொடங்கியது. இதில் கோவிந்தம்மாள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்னல் தாக்கி 17 ஆடுகள் பலி
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பாப்பான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுப்பிள்ளை மகன் வெள்ளைச்சாமி (34). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முத்துவேல் (54), முருகேசன் (40). விவசாய கூலி தொழிலாளர்களான இவர்கள் 3 பேருக்கும் சொந்தமாக வெள்ளாடுகள் இருந்தன.
நேற்று இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 24 வெள்ளாடுகளை, மேய்ச்சலுக்காக திருவரங்குளம் காட்டுப்பகுதிக்குள் ஓட்டிச்சென்றனர். மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியதை அடுத்து, மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அவர்கள் மீண்டும் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தனர்.
முந்திரி காடு பகுதியில் வந்த போது பலத்த மழை பெய்ய தொடங்கவே ஆடுகள் அப்பகுதியில் இருந்த ஒரு முந்திரி மரத்தின் அடியில் சென்று நின்றன. அப்போது திடீரென மின்னல் தாக்கியது.
இதில் அந்த முந்திரி மரத்தின் அடியில் நின்ற 17 ஆடுகள் அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தன. அந்த மரத்தின் அடியில் இருந்து வெளியேறிய 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. மேலும் வெள்ளைச்சாமி, முத்துவேல் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications