மின் தட்டுப்பாட்டை 'ஆராய' 10 பேர் குழு அமைத்த ஜெ: இந்தக் குழுவால் என்ன செய்துவிட முடியும்?

ஆனால், இந்தக் குழுவால் என்ன செய்துவிட முடியும் என்று தெரியவில்லை.
தமிழகத்தின் மின்சாரத் தேவை தினந்தோறும் 12,000 மெகா வாட் ஆகும். ஆனால், மாநிலத்தில் அனல், புனல், அணு, காற்றாலை மின்சார உற்பத்தி 7,500 மெகாவாட் மட்டுமே. இதனால் தினந்தோறும் சுமார் 4,500 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுகிறது.
இதிலும் தமிழகத்தின் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அரசு வழங்கி வருகிறது. இதனால் வீடுகள், சிறிய தொழிற்சாலைகள், ஏன் மருத்துவமனைகளுக்குக் கூட தடையில்லா மின்சாரம் தரப்படவில்லை.
இந் நிலையில் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்கு 10 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்து உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தின் மின் நிலைமை குறித்து தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் கே.ஞானதேசிகன், எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் ரமேஷ்குமார் கண்ணா, உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால், நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. கே.ராமானுஜம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும், இதைப் போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், பணிகள் நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டினை விரைவில் போக்கும் வகையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு, 9 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினை அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மின்துறை அமைச்சர் தலைமையிலான குழுவில் கீழ்கண்ட உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்:
1. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.
2. தமிழக அரசு தலைமை செயலாளர்.
3. அரசு கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.
4. தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம்.
5. அரசு முதன்மை செயலாளர், எரிசக்தி துறை.
6. அரசு முதன்மை செயலாளர், உள்துறை.
7. அரசு முதன்மை செயலாளர், நிதித்துறை.
8. முதல்வரின் முதன்மை செயலாளர்-2.
9. அரசு செயலாளர், வேளாண்மைத்துறை.
இந்தக் குழு, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூடி, தமிழகத்தின் மின் நிலைமையை ஆராய்ந்து முதல்வரிடம் தனது அறிக்கையினை அளிக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை ஓ.கே, அப்புறம்?












Click it and Unblock the Notifications