கீ செயின்'களில் வைத்து கடத்த முயன்ற ரூ.1.5 கோடி போதைப்பொருள்-சென்னை ஏர்போர்டில் சிக்கியது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கொரியர் மூலம் கீ செயின்களில் வைத்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை, சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக, சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள சரக்கு பிரிவிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு வந்த கொரியர் பார்சல்களை ஆய்வு செய்தனர். அப்போது சேப்பாக்கத்தில் இருந்து சரவணன் என்பவரின் பெயரில் வந்த கீ செயின் பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பார்சலை திறந்த பார்த்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் கீ செயின்களை கையில் பிடித்து கொள்ளும் பகுதியில் தோலினால் செய்யப்பட்ட கைப்பிடி இருந்தது. இதை திறந்து பார்த்த போது, அதனுள் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பார்சலில் இருந்த 2,550 கீ செயின்களிலும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதை மொத்தமாக சேகரித்த போது, 7.5 கிலோ எடை கொண்ட ரூ.1.5 கோடி மதிப்பு வாய்ந்த போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதை கைப்பற்றிய அதிகாரிகள், அனுப்பப்பட்ட முகவரி குறித்து விசாரித்த போது அது போலியானது என்பது தெரியவந்தது.
போதைப்பொருளை அனுப்பி வைத்த நபர் மற்றும் அதை பெற்று கொள்ள கூடிய நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications