சைக்கிளுக்கு 2 ரூவா, ரயிலுக்கு 1000 ரூபா, பிளேனுக்கு 5,000 ரூபா.. 'காசு இல்லையே'-ஏர் இந்தியா!

டெல்லி இந்தியா காந்தி சர்வதேச விமானத்தை நிர்வகிக்கும் டெல்லி இன்டர்நேசனல் ஏர்போர்ட் நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ. 566 கோடி பார்க்கிங் கட்டண பாக்கி வைத்துள்ளது. இந்த மாதம் மேலும் ரூ. 26 கோடி பாக்கி சேரப் போகிறது.
அதே போல ஹைதரபாத் ஜிஎம்ஆர் சர்வதேச விமான நிலையதிற்கும் ஏர் இந்தியா ரூ. 100 கோடி பார்க்கிங் கட்டண பாக்கி வைத்துள்ளது.
இது குறித்து டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் பலமுறை ஏர் இந்தியா தலைமைக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லையாம். 'பைசா பாத்மே தேத்தா ஹூம்' (நமக்குத் தெரிந்த இந்தியில் 'காசை அப்புறம் தர்றேன்' என்று அர்த்தம்) என்று ஒரு மரியாதைக்குக் கூட பதில் தர மறுக்கிறார்களாம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜிஎம்ஆர் நிறுவனம் ஆட்களை ஏர் இந்தியா ஆபீசுக்கு அனுப்பி கெஞ்சியதையடுத்து ரூ. 15 கோடிக்கு ஒரு செக்கும், பல நாட்கள் கழித்து ரூ. 5 கோடிக்கு ஒரு செக்கும் தந்து அனுப்பியுள்ளார்களாம் ஏர் இந்தியா அதிகாரிகள் (செக் ஓகே, பேங்க் அக்கெளண்ட்ல பணம் இருக்கா?)
எல்லா விமான நிறுவனங்களும் விமான நிலையத்தில் ஒவ்வொரு விமானத்தையும் தரையிக்க, விமான நிலையத்தை பயன்படுத்த, விமானத்தை நிறுத்தி வைக்க என பார்க்கிங் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் டெல்லி விமான நிலையம் வழியாக பயணிக்கும் ஒவ்வொரு உள்நாட்டு பயணியின் டிக்கெட் மீதும் ரூ. 200ம், சர்வதேச பயணியின் டிக்கெட் மீது ரூ. 1,100 கூடுதல் கட்டணமாக ஏர் இந்தியாவால் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் விமான நிலைய நிர்வாகத்துப் போக வேண்டிய உபயோகிப்பாளர் கட்டணமாகும். இதையும் டிக்கெட் கட்டணத்தோடு சேர்த்து வாங்கி ஏர் இந்தியாவே சாப்பிட்டுவிட்டது தான் ஜிஎம்ஆர் நிறுவனத்தை கடுப்பாக்கி வருகிறது.
ஏர் இந்தியா மற்றும் பிற விமான நிறுவனங்கள் பாக்கி வைத்து வருவதால், ஜிஎம்ஆர் நிறுவனம் டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களை பராமரிக்க காசு இல்லாமல் கடன் வாங்க ஆரம்பித்துள்ளதாம். கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ. 700 கோடி கடன் வாங்கும் நிலைக்கு எங்களை தள்ளி விட்டுவிட்டனர் என்று புலம்புகின்றனர் ஜிஎம்ஆர் நிறுவனத்தினர்.
ஆனால், ஜிஎம்ஆர் உள்ளிட்ட விமான நிலையங்களை விரிவாக்கி, நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் பெரும் கொள்ளை அடித்து வருவதாகவும் விமான நிறுவனங்களின் புகார் உள்ளது. இதனால் முன்னணி குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான மலேசியாவின் ஏர் ஏசியா டெல்லி, மும்பைக்கு தனது சேவையையே நிறுத்திவிட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications