குண்டர் சட்டம் பயன்பாட்டில் தவறு: கலெக்டர்-போலீஸ் அதிகாரிக்கு தலா ரூ.5,000 அபராதம்!
மதுரை: குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கீழதுழுக்கன்குளத்தை சேர்ந்தவர் கந்தசாமி(32). இவர் மீது மணல் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க விருதுநகர் மாவட்ட கலெக்டர் கடந்த ஜூன் 7ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தன் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி கந்தசாமி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
இந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் மனுதாரர் சிறையில் இருந்துள்ளார். அவர் மே 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் ஜூன் 1ம் தேதி நீதிமன்ற காவல் நீட்டிப்பு பெற்றதாக குண்டர் தடுப்பு சட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை. இவற்றை பார்க்காமலேயே விருதுநகர் மாவட்ட கலெக்டர் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடும் போது, அதற்கான காரணங்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும். மனதை செலுத்தாமல் உத்தரவில் அதிகாரிகள் கையெழுத்திட கூடாது. இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தின் உண்மையான நோக்கம் அடிபடுவதுடன், அந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் நபரின் தனி மனித சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது.
இது போன்ற எந்திரத்தனமாக செயல்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதை தடுக்க விருதுநகர் கலெக்டருக்கும், மனுதாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்த போலீஸ் அதிகாரிக்கும் தலா ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த பணத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மனுதாரருக்கு வழக்கு செலவு தொகையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications