ஒபாமாவை வழி மொழிந்த ராம்னி: இறுதி விவாதத்தில் அதிரடி திருப்பம்

Subscribe to Oneindia Tamil

Romney and Obama
போக்கா ரிட்டோன் (யு.எஸ்): தற்போது நடந்து முடிந்த (நியூயார்க் நேரம் திங்கள் இரவு 9 முதல் 10.30 வரை) அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதி விவாதத்தில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றார். வெளியுறவுக் கொள்கை குறித்தான இந்த விவாதத்தில், கொள்கை அளவில் ஒபாமா இதுவரை நிறைவேற்றிக் கொண்டிருப்பதையே ராம்னியும் திரும்பவும் பேசியதால், கிட்டத்தட்ட ஒபாமாவை வழி மொழிந்தது போல் ஆகிவிட்டது.

முதன் முறையாக ஒசாமா பின்லேடனை ஒழித்து கட்டியதற்காக ஒபாமாவுக்கு ராம்னி வாழ்த்தும் கூறினார் இந்த விவாதத்தில். இன்னும் அரை மணி நேரம் கொடுத்திருந்தால் ராம்னியே ஒபாமாவுக்கு வாக்கு கேட்டிருப்பார் என்று சி.என்.என் கலந்துரையாடலில், செய்தி விமர்சகர்கள் காமெடி செய்தனர்.

இஸ்ரேல் எங்கள் நண்பன்

இருவருமே இஸ்ரேல் எங்கள் நட்பு நாடு. அவர்களுக்கு ஆபத்து என்றால் அமெரிக்கா கொதித்தெழும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஒபாமா ஒரு படி மேலே போய் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை வலியுறுத்தி பேசியதோடு மட்டுமல்லாமல், இஸ்ரேலுக்கு எதிராக யார் போர் தொடுத்தாலும், அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுக்கும் என்றார்.

சிரியா குறித்து பேசிய ராம்னி, திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த்தை பார்த்த ஒபாமா நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்தார். தனது பதிலில், லிபியா, துஸ்னியா, எகிப்து ஆகிய நாடுகளில் எவ்வாறு அதிக செலவில்லாமல், நாடுகளை விடுதலை அடையச்செய்து பாதுகாப்பான நபர்களுடன் ஒப்படைத்தோமோ அதே போல், சிரியாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

லிபியாவில், அமெரிக்க தூதர் உள்ளிட்டோர் பலியானதற்கு, ஆயிரக்கணக்கான லிபிய மக்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தியதையும், அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்ததையும் சுட்டிக்காட்டிய ஒபாமா, லிபியா என்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

ஒபாமா சுற்றுப்பயணத்தை கண்டித்துப் பேசிய ராம்னி

ஒபாமா அதிபராக பதவியேற்றவுடன் மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதையும், அங்கே அவரது பேச்சையும் ‘ஒபாமா மன்னிப்பு கேட்டார்' என்று ராம்னி குற்றம் சாட்டினார்.

பதில் அளித்த ஒபாமாவோ, தான் அதிபர் வேட்பாளராக இஸ்ரேலுக்கு சென்றபோது தேர்தல் நிதி திரட்டவில்லை, நன்கொடையாளர்களை கூட்டிச் செல்லவில்லை என்று ராம்னிக்கு குட்டு வைத்தார். மேலும், அனைத்து தொலைக்காட்சிகளும் ராம்னியின் குற்றச்சாட்டு தவறானது என்றும் ஒபாமா யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்ற உண்மையையும் அறிவித்தனர்.

ஈரானிடம் அணுகுண்டு இருக்கிறதா?

ஒபாமாவின் தவறான அணுகுமுறையால், ஈரான் ஆயிரக்கணக்கில் அணுகுண்டு தயாரித்து வருவதாகவும் இன்னும் நான்கு ஆண்டுகளில் அவை முழுமை அடைந்து விடுவதாகவும், மத்திய ஆசிய நாடுகள் அனைத்தும் ஆபத்தில் இருப்பதாகவும், ராம்னி கூறினார்.

அடுத்து பேசிய ஒபாமா, "கடுமையான பொருளாதார கட்டுப்பாட்டின் மூலம் ஈரானின் பணமதிப்பு 80 சதவீதம் சரிந்து விட்டது. எண்ணெய் உற்பத்தி இருபது வருடங்களுக்கு முந்தயை அளவுக்கு குறைந்து விட்டது. கவர்னர் ராம்னியோ, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனாவின் எண்ணெய் நிறுவனத்தில்முதலீடு செய்துள்ளார். அவரா ஈரானுக்கு எதிரான நிலை எடுப்பார் என நம்புகிறீர்கள். இப்போது ஈரானுக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதை அவர்கள் உபயோகித்துக் கொள்ள வில்லையென்றால், உலக நாடுகள் ஒன்றிணைந்து, எனது தலைமையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க தயங்க மாட்டோம். எனது தலைமையில் அமெரிக்கா இருக்கும் வரை, ஈரானில் அணுகுண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை," என்று அழுத்தமாக கூறினார்

அமெரிக்க ராணுவம் பலவீனமடைந்துள்ளதா?

அமெரிக்க ராணுவத்திற்கான பட்ஜெட்டை ஒபாமா குறைத்து விட்தாகவும், அதனால் ராணுவம் பலவீனமாகிவிட்ட்தாகவும், கப்பல் படை 1917 ஆம் ஆண்டு அளவுக்கும், விமானப்படை 1947 ஆம் ஆண்டு அளவுக்கும் சிறியதாகவும், பலவீனமடைந்து விட்டதாகவும் பயம் காட்டினார்.

ஒபாமாவோ, குறைவான கப்பல்கள் இருக்கிறது என்று சொல்லும் கவர்னர் ராம்னி அவர்களே, நம் படையில் குதிரைகளும் குறைவாகத்தான் இருக்கின்றன. அதே சமயத்தில் அதி நவீன போர் விமானங்களையும், நீர்மூழ்கி கப்பல்களையும் குவித்து வைத்துள்ளோம். உங்களுக்கு நமது ராணுவம் குறித்து ஒன்றுமே தெரியவில்லையே...

ராணுவத்தை பொறுத்தவரை, ராணுவச் செயலாளாரிடம் விவாதித்து படையை வலுவான நிலையில் வைத்துள்ளோம். உலகின் பெரிய நாடுகளில், பத்து நாடுகளுக்கு இணையான ராணுவ பட்ஜெட் ஒதுக்கி இருக்கிறோம். எந்த வகையிலும் அமெரிக்க பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க மாட்டோம்," என்றார்.

ராம்னியின் பாகிஸ்தான் பாசம்

ஆஃப்கானிஸ்தானிலிருந்து படைகள் வெளியேறுவது குறித்த விவாதத்தில், பாகிஸ்தானை அமெரிக்கா கைவிட்டு விடக்கூடாது. பாகிஸ்தானின் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கைக்கு போய்விடும். ஆகவே அவர்களுக்கு பண உதவி கொடுத்து கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆதரவு திரட்டப் பார்த்தார் ராம்னி.

ஒபாமாவோ, "நாம் ஆஃப்கானிஸ்தானுக்கு ஏன் போனோம் என்பதையே இன்றைக்கு மறந்து விட்டோம் போலிருக்கிறது. ஒசாமா பின்லேடனைத் தேடித்தான் அங்கு சென்றோம். அந்த வேலை முடிந்து விட்டது. அல்காய்தாவின் பலம் குறைக்கப்பட்டுள்ளது. ஆஃப்கான் அரசு தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் உள்ளூர் படைகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம். அவர்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்க வீரர்கள் பலியாவதை ஏற்க முடியாது. சென்ற வேலையை சீக்கிரம் முடித்து விட்டு படைகள் திரும்ப பெறப்படும்.

வீரர்களின் சேவையை உள் நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு உபயோகித்துக்கொள்வேன் என்று உறுதியாக கூறினார்.

என்ன காரணத்தினாலோ, பாகிஸ்தான் குறித்து எந்த விதமான கருத்தையும் ஒபாமா தெரிவிக்கவில்லை.

அதே சமயத்தில் இந்தியாவுடனான உறவு குறித்தும் இருவரும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இலங்கை, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாடுகள் விவகாரங்களும் இந்த விவாதத்தில் கேள்விகள் எழுப்ப வில்லை.

சீனாவும் அமெரிக்காவும்

சீனா தான் அமெரிக்காவுக்கு அடுத்த தலைவலியாக உருவெடுக்கும் என இருவருமே கருத்து தெரிவித்துள்ளனர். பணமதிப்பை குறைத்து காட்டுவதன் மூலம் அமெரிக்க வேலைகளுக்கு உலை வைத்து வரும் சீனாவை, கரன்சி கட்டுப்பாடு விதித்து முடிவுக்கு கொண்டுவருவேன் என்றார் ராம்னி. அது வர்த்தக போருக்கு வழி வகுக்காதா என்ற துணைக் கேள்விக்கு, இல்லை சீனா கண்டிப்பாக வழிக்கு வரும் என்றார்.

ஒபாமாவோ, சீனாவின் முறையற்ற வர்த்தகத்தை, நான் ஏற்கனவே கட்டுப்படுத்தி இருக்கிறேன். பென்சில்வேனியா, ஒஹயோ ஸ்டீல் நிறுவனங்களுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கச்செய்துள்ளேன். சீனாவின் போலி டயர் உற்பற்தியை தடுத்து நிறுத்தி, அமெரிக்க டயர் நிறுவன்ங்களை காப்பாற்றியுள்ளேன். டயர் நிறுவன் விவகாரத்தில் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த்து இதே கவர்னர் ராம்னி தான். எனது ஆட்சியில் சீனாவுக்கான ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்துள்ளது.

சீனாவிற்கு சவால் விடும் வகையில் இருக்க வேண்டும் என்றால், உயர்தொழில் நுட்பம், ஆராய்ச்சிகளில் அமெரிக்கா முதல் நிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் அதிக கணித, அறிவியல் ஆசிரியர்கள் ,கல்வி கட்டமைப்பு, ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவேண்டும் என்கிறேன்.

ஆனால் கவர்னர் ராம்னியோ, கேட்காத ராணுவத்திற்கு 2 ட்ரில்லியன் டாலரும், பணக்காரர்களுக்கு 5 ட்ரில்லியன் டாலர்கள் வரிவிலக்கும் கொடுக்க வேண்டும் என்கிறார். அவரது கணக்கு சரியாவர வில்லை என்று உள்ளூர் விவகாரத்தையும் கையிலெடுத்தார் ஒபாமா.

இடைமறித்த ராம்னியோ, கணக்கு சரியாக இருக்கிறது எங்கள் இணையத்தளத்தில் காட்டியிருக்கிறோம் என்றார். உடன் மறுத்த ஒபாமாவோ, நாங்களும் பல முறை அவர்கள் இணையத் தளத்தை பார்த்துவிட்டோம், 7 ட்ரில்லியன் கூடுதல் செலவுடன், எப்படி பற்றாக்குறையை சமாளிப்போம் என்ற கூட்டல் கழித்தல் கணக்கு சரியாக இல்லை என்று பதிலடி கொடுத்தார்.

சீனாவுடன் மட்டுமல்ல, பக்கத்திலுள்ள கிழக்காசிய நாடுகளுடனும் வர்த்தக உறவை விரிவுபடுத்துவோம். அதன் மூலம் சீனாவுக்கு செக் வைப்போம் என்று கூறிய ஒபாமா, தென்சீனக் கடல் பிராந்தியம் அனைவரின் வர்த்தகத்திற்கும் பய்ன்படவேண்டும் என்ற வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே புதிய தளத்தை அமைத்துள்ள அமெரிக்கா, சீனாவுக்கான மறைமுக எச்சரிக்கை கொடுப்பதாகவே ஒபாமாவின் பேச்சு கருதப்படுகிறது.

உள்நாட்டு விவகாரம்

எதிர்பார்த்தது போலவே, உள்ளுர் பொருளாதார விவகாரத்தில் ஒபாமைவை ராம்னி குற்றம் சாட்டினார். ஒபாமாவும் அவருக்கே உரிய வகையில் பதிலடி கொடுத்தார். விவாதங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது போரடிக்கும் பழைய விஷயமாகவே தெரிந்தது.

கவர்னராக ராம்னி இருந்த போது மச்சூசெட்ஸ் மாநிலம் கல்வியில் சிறந்து விளங்கியதாக சொன்னார். ஒபாமாவோ அது நீங்கள் ஆட்சியை பிடிப்பதற்கு 10 வருடம் முன்னால் என்று இடை மறித்தார்.

ராம்னி வழக்கம் போல் 'ரஷயா முதல் எதிரி', 'ஈராக்கில் ராணுவம்' உள்ளிட்ட சில கருத்துக்களில் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.

ஒபாமாதான் தகுதியானவர் - சிஎன்என்

2012 ம் தேர்தலின் இன்றைய இறுதி விவாதத்தில், ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று விவாதங்களில் முன்னிலை வகிக்கிறார். அவரது தெளிவான பேச்சு, பதில்கள் மூலம் அமெரிக்க கமாண்டர் இன் சீஃப்க்கு தகுதியானவர் ஒபாமா தான் என்று சி.என்.என் உடனடி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

போட்டி நிறைவடைந்தவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் மிஷல் ஒபாமா மேடைக்கு வந்து கணவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராம்னியின் மனைவி ஆன் ராம்னியும், குடும்பத்தினரும் மேடையில் ஏறி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்

அமெரிக்க தேர்தல் முடிவு தெரிவதற்கு இன்னும் 14 நாட்களே உள்ளன. மூன்றாவது விவாதத்தில் ஒபாமா ஜெயித்து விட்டார்!

தேர்தல் முடிவுகளும் அப்படித்தான் இருக்கும் என்கின்ற இப்போது மீடியாக்களும்!

-ஒன்இந்தியா தமிழ் எக்ஸ்க்ளூசிவ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+