கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுதலை!
கத்தார்: திசை மாறி சென்று கத்தார் நாட்டின் கடல் பகுதியில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு, கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை கத்தார் நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
குமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த சுந்தர், ஆண்டனி, சஜூ, ஜஸ்டின், சசி, ததேயூஸ், முட்டத்தை சேர்ந்த நார்பர்ட், இனயத்தை சேர்ந்த ஜெனிபர், புதூர் சுமன், மேலமணக்குடி சேவியர், ஜான்சன், பத்தான், கீழமணக்குடி ஆண்டனி உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த மொத்தம் 22 மீனவர்கள் பக்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி பஹ்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரது விசைப்படகில் சென்று அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் பலத்த காற்று வீசியதால், படகு திசைமாறி சென்று கத்தார் நாட்டு எல்லைக்குள் நுழைந்து விட்டனர். இதனால் அவர்களை கத்தார் நாட்டு கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் 22 மீனவர்களில் 10 பேருக்கு 15 நாள் சிறை தண்டனையும், தலா ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் கடந்த 18ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதே போல, குளச்சலை சேர்ந்த ஆன்டனி, ஜஸ்டின், சாஜி, சிஜூமோன், இனயத்தை சேர்ந்த ஜெனிபர், கீழமணக்குடி சேவியர், ஆன்டனி மைக்கேல், சகாய சுமன், மிக்கேல்ராஜ், சகாய ஆன்றோ, சுந்தர் உள்ளிட்ட 10 மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை 22ம் தேதி நடைபெற்றது.
அப்போது படகு ஓட்டுநர்கள் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும், அதில் இருந்த 8 மீனவர்களுக்கு தலா ரூ.71,500 வீதமும் என்று மொத்தம் ரூ.9 லட்சத்து 72 ஆயிரம் அபராதம் விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இவர்களுக்கான அபராத தொகைகளை அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களே முன் வந்து செலுத்தி மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து கத்தார் சிறையில் இருந்த 22 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications