அமெரிக்க தாக்குதலை எதிர்ப்பது ஏன்?-கனடாவில் இம்ரான் கானிடம் விசாரித்து அவமதிப்பு

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தெக்ரிக்-இ-இன்சாப் என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இக்கட்சியின் தலைவராக உள்ள இம்ரான் கான், சமீபகாலமாக பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள வசிகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கட்சி வளர்ச்சிக்காக நிதி திரட்டும் வகையில், நியூயார்க் நகரில் நடைபெற இருந்த ஒரு சொற்பொழிவில், இம்ரான் கான் பங்கேற்க இருந்தார். இதற்காக கனடாவின் டொராண்டோ விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் இம்ரான் கானும், சில கட்சி தலைவர்களும் ஏறினர்.
அப்போது விமான நிலையத்தில் இருந்து வந்த சில அமெரிக்க குடியரிமை அதிகாரிகள், இம்ரான் கானையும், அவரது கட்சி தலைவர்களையும் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது பாகிஸ்தானில் தாலிபன் ஆதிக்கம் கொண்ட இடங்களில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்த இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் துருவி துருவி விசாரித்துள்ளனர்.
இதில் அதிருப்தியடைந்துள்ள இம்ரான் கான், டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
கனடாவில் விமானத்திற்குள் இருந்த என்னை அமெரிக்க குடியரிமை அதிகாரிகள் அழைத்து சென்று எனது கருத்தை குறித்து விசாரித்தனர். எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும். எனது விமான பயணம் ரத்து செய்யப்பட்டதால், எனது கருத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. தாமதமானாலும் நியூயார்க்கில் உள்ள எனது கட்சியினரை சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இம்ரான் கான் பங்கேற்க இருந்த கட்சி சொற்பொழிவு ரத்து செய்யப்பட்டதாக, இம்ரான் கான் நடத்தி வரும் கட்சியின் நியூயார்க் பொறுப்பாளர் முஸ்ஸாமில் அன்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications