கருப்புக் கொடியுடன் குவிந்த தேமுதிகவினர்.. தப்பிய ஜெ. அணி மைக்கேல் ராயப்பன்

தேமுதிகவை சேர்ந்த மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். இதனால் தேமுதிக தொண்டர்கள் அந்த எம்.எல்.ஏக்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வீடுகளை தாக்குவது, உருவபொம்மையை எரிப்பது என தேமுதிக தொண்டர்கள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் மைக்கேல் ராயப்பன் இன்று காலை ரயில் மூலம் நெல்லை வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்த பாடுபட்டு வருகிறேன். இங்குள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தேன் என்றார்.
தேமுதிக கட்சி தலைமை என்னை சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய முதல்வரையோ, அமைச்சர்களையோ, அரசு துறை அதிகாரிகளையோ சந்திக்க அனுமதி மறுத்தனர். அவர்களது விழாக்களில் கலந்து கொள்ளகூடாது என்றனர். ஆனால் தொகுதி நலனுக்காகத்தான் முதல்வரை தனியாக சென்று சந்தித்தோம்.
ராதாபுரம் தொகுதியில் திசையன்விளையை தனி தாலுகா ஆக்குவது, ராதாபுரத்திற்கு அரசு ஐ.டி.ஐ. கொண்டு வருவது, எம்.எல். தேரியில் புதிய குளம் வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்துள்ளேன். அந்த கோரிக்கைகளை கனிவோடு கேட்ட முதல்வர் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார். மீண்டும் தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து பேசுவேன்.
என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வரை சந்தித்தில் தவறு ஒன்றுமில்லை. இப்போதும் நான் தேமுதிக எம்.எல்.ஏ.வாகவே நீடிக்கிறேன். எனது தொகுதியில் 90 சதவீதம் தேமுதிகவினர் என் பக்கம் இருக்கிறார்கள். எனது முடிவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
தப்பிய மைக்கேல் ராயப்பன்
முன்னதாக, தேமுதிக மாநகர இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் நெல்லை ரயில் நிலையத்திற்குத் திரண்டு வந்தனர். கையில் தேமுதிக கொடி மற்றும் கறுப்புக்கொடி வைத்திருந்தனர். அவர்கள் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ.வுக்கு கறுப்புக்கொடி காட்டும் நோக்கில் வந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து முன்னதாகவே மைக்கேல் ராயப்பன் வாகனம் ரயில் நிலையத்தை கடந்து போய் விட்டது. இதனால் கருப்புக் கொடி காட்ட முடியாமல் தேமுதிகவினர் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications