ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கிய இலங்கை கடற்படை: பாதுகாப்பு கோரும் மீனவர்கள்
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திவருவது தினசரி நிகழ்வாகி வருகிறது.
ராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரம் மீனவர்கள் 646 படகுகளில் சனிக்கிழமையன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நிலா புயல் காரணமாக கடலில் சீற்றம் ஏற்பட்டதால் ஒரு வார விடுமுறைக்குப் பின்னர் நேற்று காலை அவர்கள் மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் எடுத்து சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் சில மீனவர்கள் மீது கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். ஆனால் தங்கள் மீதான தாக்குதல் குறித்து அதிகாரிகள் யாரிடமும் புகார் கூறவில்லை.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது தினசரி நிகழ்வாகி வருவதால் கடலுக்குள் செல்லவே அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், தாக்குதலை தடுக்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications