தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இங்கு தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி பல வாரங்கள் பாதிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை 3வது யூனிட் கொதிகலனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து தெர்மல் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தின் காரணமாக 3வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளும் மிகவும் பழமையானதாகி விட்டதால் அவற்றில் அடிக்கடி பழுதும், தீ விபத்துகளும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications