திருத்தணி தணிகை மீனாட்சி அம்மன் கோவில் காவலாளி கொலை- பஞ்சலோக கவசம் கொள்ளை
திருத்தணி: திருத்தணி தணிகை மீனாட்சி அம்மன் கோவில் காவலாளியை கொலை செய்து கோவிலில் இருந்த பஞ்சலோக கவசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி அருகே உள்ளது ஆறுமுகசாமி கோவில். இங்கு 200 ஆண்டு பழமை வாய்ந்த தணிகை மீனாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இங்கு ஜெயராமன் (65) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
தனியே வசித்து வந்த இவர் கோவிலிலே சமைத்து சாப்பிட்டு தூங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் நேற்று கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயராமனை தலையணையால் முகத்தை அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் கோவிலுக்குள் சென்று அங்கிருந்த உண்டியல், பஞ்சலோக கவசம் மற்றும் பூஜை பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். உண்டியலையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இன்று காலை கோவிலுக்கு வந்தவர்கள் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தக் கோவில் ஊருக்கு வெளியே இருப்பதாலும் அருகே மிகச் சில வீடுகளே இருப்பதாலும் இந்தக் கொள்ளையும் கொலையும் எளிதாக நடந்துள்ளது.
இந்தக் கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் ஜாத்திரை திருவிழா மிகவும் விசேஷமானது. அப்போது தான் பஞ்ச லோகத்தால் ஆன திருமுக கவசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விசேஷ வழிபாடு நடத்தப்படும். பின்னர் அந்த பஞ்சலோக கவசம் கோவிலில் உள்ள பீரோவில் பாதுகாக்கப்படும். இதைத் தான் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications