கள்ளக் காதலனுக்காக கணவரை விஷம் கொடுத்து கொன்ற மனைவி!
கள்ளக்குறிச்சி: 49 வயது நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 39 வயதுப் பெண் தனது கணவருக்கு பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்தார். இதில் கணவர் உயிரிழந்தார். போலீஸார் அந்தப் பெண்ணையும், கள்ளக்காதலரையும் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமதைத் சேர்ந்தவர் 48 வயது முத்து. இவரது மனைவி சுலோச்சனா. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 49 வயது முத்துச்சாமிக்கும் காதல் ஏற்பட்டு விட்டது. இது முத்துவுக்குத் தெரிய வந்தது. இருவரையும் கண்டித்தார். ஆனாலும் கள்ளக்காதல் நிற்கவில்லை, தொடர்ந்தது.
2 நாட்களுக்கு முன்பு முத்து வீட்டுக்கு மது வாங்கிக் கொண்டு வந்தார். பின்னர் அதில் கொஞ்சத்தைக் குடித்து விட்டு வீட்டில் வைத்தார். பின்னர் நேற்று இரவு தனது நண்பர் ஆழ்வார் என்பவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இருவரும் மீதம் வைத்த மதுவை எடுத்து அருந்தினர். அப்போது இருவருக்கும் கடும் வயிற்று வலி ஏற்பட்டுத் துடித்தனர்.
சிறிது நேரத்தில் முத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆழ்வாரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் முத்துவின் அண்ணனான துரைசாமி போலீஸில் புகார் கொடுத்தார். அதில் முத்துவின் மனைவிதான் தனது தம்பியை விஷம் கொடுத்துக் கொன்று விட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். சுலோச்சனாவை அழைத்து விசாரணை நடத்தினர்.
அதில் தானும், முத்துச்சாமியும் சேர்ந்துதான் கணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக சுலோச்சனா ஒத்துக் கொண்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications