பிரச்சினைகளிலிருந்து தப்ப காங்கிரஸின் அடுத்த குறி அப்சல் குரு...?

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய 4 வருடம் கழித்து நேற்று திடீரென கசாப்பை தூக்கிலிட்டனர். இது பெருத்த வரவேற்பையும், பல சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
ஊழல் புகார்கள், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் பாஜக, திரினமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவுமே கசாப்பை அவசரம் அவசரமாக தூக்கிலிட்டு விட்டதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
மேலும் கசாப்புக்கு முன்பே நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் இந்தியரான அப்சல் குரு. ஆனால் அவரைத் தூக்கிலிட மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து அப்சல் குரு பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
இந்த நிலையில்தான் புதிய உள்துறை அமைச்சராக கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற சுஷில் குமார் ஷிண்டேவுக்கு அப்சல் குரு உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பி வைத்துள்ளார். இது அப்சல் குரு மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், அப்சல் குருவின் கருணை மனு தொடர்பாக 48 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் ஷிண்டே கூறியுள்ளார். இதனால் அடுத்து அப்சல் குரு தூக்கிலிடப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி பாராளுமன்றம் மீது நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்பட 12 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அப்சல்குருவின் மனைவி சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று வரை இந்த கருணை மனு நிலுவையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications