முதல் நாளே அமளி... லோக்சபாவில் திரிணாமூலின் நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி- ஒத்திவைப்பு

மக்களவையில் நடந்தது என்ன?
இன்று காலை மக்களவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன் பின்னர் கேள்வி நேரம் தொடங்க இருந்தபோது நிலக்கரி ஊழல், சமையல் எரிவாயு சிலிண்டர் கடுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகிய விவாரங்கள் தொடர்பாக பல்வேறு கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவையில் கடுமையான அமளி உருவானது. சில எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். சபாநாயகர் மீரா குமார் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துப் பார்த்தும் பயனில்லை. இதனால் மக்களவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
திரிணாமுல் தீர்மானம் நிராகரிப்பு
பகல் 12 மணிக்கு அவை கூடியபோதும் இதேபோல் கூச்சல் குழப்பம் இருந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு பற்றி இடதுசாரி கட்சிகள் முழக்கம் எழுப்பின. பகுஜன் சமாஜ் கட்சியோ உத்தரப்பிரதேச மாநில அகிலேஷ் யாதவ் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியது. இதனால் மீண்டும் அவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பகல் 12.30க்கு அவை கூடியது
திரிணாமுல் தீர்மானம் தள்ளுபடி
அப்பொழுது திரிணாமுல் காங்கிரஸார், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை தாக்கல் செய்தனர். அக்கட்சியின் சுதீப் பந்தோபாத்யா இதைத் தாக்கல் செய்தார். ஆனால் இந்த நோட்டீஸை எடுத்துக் கொள்ள அக்கட்சியின் 19 எம்.பிக்களுடன் ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பிக்கள் சிலர் மட்டுமே ஆதரவு அளித்தனர். மொத்தம் 55 எம்.பி.க்கள் முன்மொழிந்தால் மட்டுமே தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலையில் இதனை சபாநாயகர் மீராகுமார் தள்ளுபடிசெய்தார்.
தொடர் கூச்சல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்;பிக்கள். அவையில் கூச்சல் எழுப்பினர். அரசுக்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜ், 184-வது பிரிவின் கீழ் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த விவகாஅரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் திரிணாமுல் காங்கிராசார் தொடர்ந்தும் கூச்சல் எழுப்ப அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது சபாநாயகர் இருக்கை முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூடி முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடந்து அவை கூடிய உடனேயே நாள் முழ்வதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
இதேபோல் மாநிலங்களவையில் இன்று காலை கூடியதும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்து நிலம் புயலால் உயிரிழந்தோருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி. பந்துக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை பிரதமர் மன்மோகன்சிங் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
பின்னர் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு திருத்தம் பற்றிய பிரச்சனையை கிளப்பினர். அப்பொழுது பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவும் எழுந்து ஏதோ பேசினார். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை நடவடிக்கைகள் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் வேண்டுகோள்
முன்னதாக காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், அனைத்து விவகாரங்களிலும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications