இன்று பிரபாகரன் பிறந்தநாள்- நாளை கார்த்திகை தீபம் - மாவீரர் நாள்: அச்சத்தில் ஈழத் தமிழர்கள்!
யாழ்ப்பாணம்: தமிழீழத் தேசியத் தலைவராக போற்றப்படுகிற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 58-வது பிறந்த நாளை முன்னிட்டு இலங்கையில் தமிழர் வாழும் ப்ரதேசங்களில் ராணுவத்தினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் நாளை கார்த்திகை தீப நாளில் மாவீரர் நாள் வருவதால் தமிழர் பகுதிகளில் ஒருவித அசாதாரண நிலை உருவாகி இருக்கிறது.
பிரபாகரனின் 58-வது பிறந்தநாள்
பிரபாகரனின் 58-வது பிறந்தநாளை உலகம் முழுவதும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் யாரும் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடத வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மவட்டங்களில் இலங்கை ராணுவத்தினர் இன்று காலை முதல் தீவிர சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
ராணுவ கெடுபிடிகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக ராணுவத்தினர் கூடுதலாக குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதேபோல் பல இடங்களிலும் ராணுவத்தினர் கூடுதலாக குவிக்கப்பட்டு சாலைகளில் செல்வோர் கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்டனர்.
மாவீரர் நாளும் கார்த்திகை தீபமும்
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுமை செலுத்திய காலத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்படும். இலங்கைக்கு எதிரான போரில் வீரமரணமடைந்த போராளிகளின் கல்லறைகளில் உறவினர்கள் தீபமேற்றி வழிபாடு நடத்துவர். அதன் பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார்.
இம்முறையோ தமிழர்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றும் நாளிலேயே மாவீரர் நாளும் வந்துள்ளது. இதனால் இலங்கை அரசும் ராணுவம் கடுமையான குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது.
ஆலயங்களிலும் வீடுகளிலும் தமிழர்கள் தீபம் ஏற்றுவது என்பது இந்துமத வழிபாடு. இதை மாவீரர் நாளுக்கான தீபமாகக் கருதி தடுத்தால் பெரும் சர்ச்சை வெடித்துவிடும். இதனால் தடுக்க முடியாத நிலையில் இலங்கை ராணுவம் இருக்கிறது. தாயக விடுதலைக்காக மரணித்துப் போன தமது உறவுகளை நினைவுகூர காலம் கொடுத்த வாய்ப்பாக தமிழர்கள் கருதுகின்றனர்.
இந்து மகாசபை
தமிழர் வாழும் வடக்கு, கிழக்கில் கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபங்கள் ஏற்றுவது தொடர்பாகப் நெருக்கடியான ஒரு நிலைமை இருப்பதால் இந்து மகாசபை சார்பில் கார்த்திகை தீபம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கார்த்திகைத் தீபத் திருநாள் இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இது பண்டைக்காலம் தொடக்கம் இந்து மக்களால் பாரம்பரியமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கார்த்திகைத் தீபத் திருநாள் இந்து சமய ஆரிய கலாசார நிகழ்வாகும். இது ஒளி வடிவமான இறைவனை வீடுகளிலும் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வாக இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை இந்துக்கள் அனைவரும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும். இந்துக்களின் இந்த வழிபாட்டுக்கு அனைத்துத் தரப்பினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது,
இருப்பினும் "தீபம்" ஏற்றுவதை ராணுவம் தடுத்துவிட்டால் என்ன மாதிரியான எதிர்விளைவுகள் வரும் என்ற அச்சம் தமிழீழப் பகுதிகளில் நிலவுகிறது.
சுவரொட்டிகள்
இந்நிலையில் யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழில் "தமிழீழ இளையோர் அமைப்பு" என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில்,
"எத்தனை தடைகள் வரினும் எமது மாவீரரின் இலட்சியத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்!
விழ விழ எழுவோம் புலிகளின் வீரத்திற்கு எல்லை உண்டா?!
அண்ணனின் வழியில் நின்று தமிழீழத்தை நாம் மீட்போம்!
என்று எழுதப்பட்டிருக்கின்றன.
கிழக்கில் திருகோணமலை, உப்புவெளி உள்ளிட்ட இடங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.
மாவீரர் நாளுக்கு அழைப்பு
இந்நிலையில் மக்கள் தமது வீடுகளில் அமைதியான முறையில் ஒரு நிமிட வணக்கத்துடனாவது மாவீரர் நாளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவக இளைஞர் அணி அமைப்பாளரும் யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.நிசாந்தன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த படையினருக்கு தென்பகுதியில் நினைவுதினம் அனுஷ்டிக்க முடியும் என்றால், ஏன் தமிழர்களது உரிமைக்காகவும் விடிவிற்காகவும் உயிர்த்தியாகம் செய்த எமது உறவினரான மாவீரர்களுக்கு எங்கள் பிரதேசங்களில் நினைவுதினம் அனுஷ்டிக்கக் கூடாது? டக்கு கிழக்கில் நவம்பர் 27- மாவீரர்களுக்கு நிச்சயமாக சுடரேற்றுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் தீபமேற்றி நினைவு கூருவார்கள். இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களை சகோதர மக்களாக ஏற்றுக்கொண்டால் எமது நினைவு தின நிகழ்வுக்கு எதுவித இடையூறும் இருக்காது. இறந்து போன எங்கள் உறவுகளுக்காய் பிரார்த்திக்கும் இந்த நாளில் முடிந்தால் சிங்கள மக்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இத்தகைய பதற்றமான சூழல் நிலவுவதால் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஒருவித அசாதாரண நிலைமை உருவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications