வறண்டது மேட்டூர் அணை: கவலையில் விவசாயிகள் ..பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, கர்நாடகா நீர் வழங்காததாலும், டெல்டா பாசனத்துக்கு தொடர்ச்சியாக நீர் திறப்பதாலும், செப்டம்பர், 17ல், 84 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், 48.60 அடியாக குறைந்துள்ளது.
விவசாயிகள் கலக்கம்
அணையில் இருந்து இன்னும், 63 நாட்கள் பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும்.ஆனால், குடிநீருக்கு, 6 டி.எம்.சி.,நீர் இருப்பு வைத்தது போக, மீதமுள்ள, 11 டி.எம்.சி., நீரை இன்னும், பத்து நாட்களுக்கு மட்டுமே திறக்க முடியும். இதனால், டெல்டா பாசன நீர் திறப்பை முன்னதாகவே நிறுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களை காக்க முடியாமல் போய்விடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
நாகை விவசாயி தற்கொலை
இந்த நிலையில், நாகப்பட்டிணம் அருகே, சூரத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் போதி தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ராஜாங்கம் என்ற அந்த விவசாயி, சுமார் 6 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். இவருக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகத்தொடங்கின. இதனால் விவசாயத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று அஞ்சுவதாகவும், தமது நண்பர்களிடம் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிறு இரவு அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ராஜாங்கத்தின் சகோதரர் புகார் செய்ததையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
77 ஆண்டுகளில் 8 முறை வறட்சி
மேட்டூர் அணை கட்டிய பின், 1935, 1946, 1953, 1968, 1977, 1986, 1996, 2004 ஆண்டுகளில், பத்து ஆண்டுக்கு ஒருமுறை கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி பாதித்த ஆண்டுகளில், 1968ம் ஆண்டை தவிர, மற்ற ஆண்டுகளில் டெல்டா பாசனத்துக்கு குறித்தபடி, ஜனவரி, 28ம் தேதி வரை நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணை கட்டி முடித்து, 77 ஆண்டுகளில் நடப்பாண்டுதான் முதல் முறையாக டெல்டா பாசன நீரை, 50 நாட்களுக்கு முன்னதாக நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு, நடப்பாண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அணைப்பகுதியில் விவசாயம்
மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி வறண்டுள்ளதால் அங்கு பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் முடிவு செய்து நிலத்தை சமப்படுத்தும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்மட்டம் குறைந்ததை அடுத்து பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்துக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து சில தினங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு உள்ளது. பரிசல்கள் மட்டும் அணையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
நந்தியைப் பார்க்க ஆர்வம்
பண்ணவாடி பரிசல் துறையில் நந்தி சிலையும், கிறிஸ்தவ கோபுரமும் வெளியே தெரிகிறது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று நந்தி சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications