நான் காதலுக்கு எதிரி அல்ல; ஆனால், காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ்,
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கழக கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. பாமக தற்போது புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை என புதிய முறையில் செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் 18 மணி வரை மின்வெட்டு இருந்து வருவது பரிதாபத்திற்குரியது. நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று உறுதி அளிக்கிறேன். 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழக உபயோகத்திற்கு போக பக்கத்து மாநிலங்களுக்கு விற்கும் அளவிற்கு மாற்றி காட்டுவோம்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று ரூ. 200 கோடிக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையானது. இந்த தீபாவளிக்கு ரூ. 270 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதுதான் தமிழகத்தின் சாதனையாக உள்ளது.
நாங்கள் இனி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். வானமும், பூமியும் இருக்கும் வரை கடலில் தண்ணீர் இருக்கும் வரை திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக இந்த கூட்டத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
நாங்கள் தேர்தல் காலத்தில் யாருக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தனியாக நின்று தேர்தலை சந்திப்போம். இதே போல் உறுதிமொழியை வேறு எந்த கட்சியாவது மக்களுக்கு கொடுக்க முடியுமா? என சவால் விடுகிறேன்.
நாங்கள் எந்த ஜாதிகளுக்கோ, சமுதாயத்திற்கோ எதிரிகள் கிடையாது. நான் இது வரை 14 மாநாடுகளை நடத்தி உள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேர்த்துதான் நான் போராடி வருகிறேன். இது வரையிலும் 100 போராட்டங்கள் நடத்தி உள்ளேன். தமிழகத்தில் உள்ள 7 கோடியே 24 லட்சம் பேருக்கு சேர்த்துதான் இந்த போராட்டத்தை நடத்தி உள்ளேன்.
இந்த கூட்டத்திற்கு வந்துள்ள தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களது மகன் மற்றும் மகள்கள் கல்வி கற்கும் போது காதல் வேண்டாம். இவையெல்லாம் 21 வயதுக்கு மேல் வைத்து கொள்ளட்டும். நான் காதலுக்கு எதிரி அல்ல. பள்ளி செல்லும் பருவத்தில் பாடத்தை நன்றாக படித்து பெண்கள் முன்னேறி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்து கண்காணிப்புடன் உங்கள் மகள்களின் எதிர்காலத்தை உருவாக்குங்கள் என்றார்.
காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது:
இந் நிலையில் நெய்வேலியில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், தர்மபுரியில் நடந்த காதல் விவகார சம்பவம் தொடர்பாக உண்மையினை தெரிந்து கொண்டு, வேண்டுமென்றே திசைதிருப்பி பாமக மீதும், வன்னியர்கள் மீதும் கட்சி தலைவர்கள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.
காதல் நாடகத்தால் தமிழகத்தில் பல சமூகத்தினர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பிற சாதி பெண்கள் மீது திட்டமிட்டே காதல் ஆசை காட்டி, 10 மாதம் கழித்து ஏமாற்றி அனுப்பி விடுகின்றனர். குறிப்பாக 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களை இதுபோன்ற வலையில் சிக்க வைக்கின்றனர். காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது.
இதுபோன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் ஏராளமாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி மக்களுக்குத் தெரிய வைப்போம். 21 வயது கடந்து, உடல் மற்றும் மனரீதியாகவும் தெளிவு பெற்றவர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
தலித் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் அந்த இயக்கத்தில் உள்ள இளைஞர்களுக்கு உயர் கல்வி பெறவும், வேலைவாய்ப்புகள் பெறவும் வழிகாட்டுதல் வேண்டும். அதனை விடுத்து சாதி ஒழிப்புக்கு காதல் திருமணம் சரி என்று ஒரு இயக்கமாக நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
தர்மபுரி சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் பாமக, விடுதலை சிறுத்தையினை பிரிக்க எண்ணுகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications