சவேரியார் பேராலய திருவிழா: குமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை
குமரி: கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து லட்சகணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 8ம் நாள் திருவிழா அன்று தேர்ப்பவனி நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி தெற்கு தெரு, கம்போளம், ரயில்வே ரோடு, கோட்டார் மெயின் ரோடு, வடக்கு தெரு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. தேரோட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். தரையில் விழுந்து வணங்கி நேர்ச்சை கடன் நிறைவேற்றினர்.
ஒன்பதாம் நாள் திருவிழா அன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நற்கருணை ஆசிர் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆயர் யுவான் அம்புரோஸ் கலந்து கொண்டார். இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது .
10ம் நாள் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
காலை 6 மணிக்கு தூய சவேரியார் பெருவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், திருத்தந்தையின் இந்திய தூதர் சல்வத்தோரே பெனாட்சியோ பங்கேற்றார். மேலும், பேராலய விரிவாக்க பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா பிஷப் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications