தர்மபுரி கலவரத்திற்கு காடுவெட்டி குருவே காரணம்: செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு
கடலூர்: தர்மபுரியில் தலித் மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு காடுவெட்டி குருவும், பாச்சாரப்பாளையத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸும் தான் காரணம் என இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தர்மபுரியில் நடந்த ஜாதி மோதலுக்கு காடுவெட்டி குருவே காரணம். இதே போன்று குறிஞ்சிப்பாடியை அடுத்து உள்ள பாச்சாரப்பாளையத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் காரணம். இழந்து போன அரசியல் செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும் என்ற ஆதங்கத்தோடு ராமதாஸ் சமூக மோதல்களை தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறார். அரசியல் லாபம் தேட இது போன்ற பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் அரசியல் பேரம் பேச வேண்டும் என்ற சிந்தனையோடு ஜாதி உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார். இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் ராமதாஸுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் வேண்டும் என வலியுறுத்தி, ஜாதி அமைப்புகள் ஜனவரி 4ம் தேதி நடத்தவிருக்கும் பேராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. ஜாதி அமைப்புகளின் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தலித் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.












Click it and Unblock the Notifications