காவிரி நீர் விவகாரம்: மண்டியாவில் முழு அடைப்பு!: தமிழக பேருந்துகள் நிறுத்தம்!

முழு அடைப்பு
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் தமிழகத்துக்கு நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் நேற்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகா விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பெங்களூர்- மைசூர் சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இன்று கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்ற்கையிடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றனர். இதனால் அணைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்ட அறிவிப்பால் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசைக் கவிழ்ப்போம்
இந்நிலையில் மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவிரி போராட்டக் குழுத் தலைவர் மாதேகவுடா கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு விவசாயிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. கர்நாடக மாநில அரசு எந்த காரணத்தை முன்னிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டால், அதை கண்டித்து கிருஷ்ணராஜ சாகர் அணைப்பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். காவிரியில் தண்ணீர் திறந்து விட அரசு முன்வந்தால் கர்நாடக அரசை எப்படி கவிழ்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்றார் அவர்.
பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தம்
திம்பம் மலைப்பாதை
இதனிடையே கர்நாடகாவில் பதற்றமான சூழல் உருவானதால் ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டன. ஈரோடு மற்றும் சத்தியமங்கலத்திலிருந்து திம்பம் மலை வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், கொள்ளேகால் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில பேருந்துகள் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான புளிஞ்சூர் வரை சென்று திரும்புகின்றன. இந்தப் பகுதி வழியாக செல்லும் சரக்கு லாரிகளும் வேகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டிருப்பதால் லாரி ஓட்டுநர்கள் தவிப்புக்குளாகியிருக்கின்றனர். கர்நாடகா மாநில லாரிகளும் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்திலிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சில கர்நாடக பேருந்துகள் எல்லையான புளிஞ்சூர் வரை வந்து திரும்பிப் போகின்றன.
மாதேஸ்வரன் மலைப்பாதை
இதே போல், சேலம் மற்றும் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மற்றும் மைசூருக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் நள்ளிரவு வரை நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு பேருந்துகள் மாதேஸ்வரன் மலை வரை மட்டுமே செல்கின்றன. இதனால் மைசூர் செல்ல வேண்டியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊட்டியில் நிறுத்தம்
நீலகிரி-கர்நாடக எல்லையிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஊட்டியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளள. இன்று காலை முதல் இங்கிருந்து பேருந்துகள் எதுவும் புறப்பட்டு செல்லவில்லை கர்நாடகாவில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நீலகிரிக்கு வரவில்லை. கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூரில் இயல்புநிலை
ஆனால் ஓசூரில் இருந்து பெங்களூர் செல்லும் தமிழக மற்றும் கர்நாடகா அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளிலிருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் பேருந்துகளும் வழக்கம் போல இயங்குகின்றன.












Click it and Unblock the Notifications