அமெரிக்காவில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை குறைகிறது!!
வாஷிங்டன்: வேலையில்லாதோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் குறைய ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் மாதம் தோறும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறித்த சர்வே வெளியிடப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியான நவம்பர் மாத சர்வேயின் படி, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 7.7 சதவீதமாக குறைந்துள்ளது என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
முந்தய புஷ் ஆட்சியில் 8.8 மில்லியன் அமெரிக்கர்கள் வேலைகளை இழந்திருந்தனர்.
அதிபர் ஒபாமா ஆட்சிக்கு வந்த போது இது 7.8 சதவீதமாக இருந்தது. அமெரிக்காவில் வேலை பறிபோனால் சீனாவிலும் , ஐரோப்பாவிலும் நெறி கட்டும் என்பது இன்றைய உலகப் பொருளாதார நிலை. எனவே இந்த செய்தி உலக நாடுகளுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
இதுவரை 4.6 மில்லியன் வேலைகள் திரும்ப கிடைத்துள்ள நிலையில், இன்னும் 4.2 மில்லியன் வேலைகள் உருவாகினால்தான் பழைய நிலைக்கு திரும்ப முடியும். நவம்பர் மாதம் 146 ஆயிரம் புதிய வேலைகள் உருவாகியுள்ளன. விடுமுறை காலம் என்பதால், சில்லறை வணிகத்தில் தற்காலிக வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்த்தும் இதற்கு ஒரு காரணம்.
பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப் படி மாதம் தோறும் 150 ஆயிரம் புதிய வேலைகள் உருவாகினால், அது மக்கள் தொகை பெருக்கத்திற்கு மட்டுமே ஈடுகட்டும். பழைய நிலை திரும்புவதற்கு மேலும் பத்தாண்டுகள் ஆகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒபாமா - பேனர் பேச்சுவார்த்தை
இதற்கிடையில் 'ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்க நிலையை தடுப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஜான் பேனருடன், அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினார்.
எந்த முன் அறிவிப்பும் இன்றி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் விவரங்கள் வெளியிடப் படவில்லை. ஆனால் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெறும் என இரு தரப்பினரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் 250 ஆயிரம் டாலருக்கும் அதிகமான வருவாய் உள்ளோருக்கு 39.6 சதவீதமாக வருமான வரி இருந்தது . அடுத்து வந்த புஷ் ஆட்சிக் காலத்தில் இது 35 சதவீதமாக குறைக்கப் பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று ஒபாமாவும், கூடாது என எதிர்க் கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மெஜாரிட்டி இருப்பதால், அவர்களுடைய ஆதரவும் ஒபாமாவுக்கு தேவைப்படுகிறது. அதனால் பொதுவான ஒரு சமரச திட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
இருவருக்கும் பொதுவாக 35 க்கும் 39.6 சதவீதத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. 250 ஆயிரத்திற்கும் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு புஷ் ஆட்சியின் பழைய வருமான வரி தொடரவேண்டும் என்பதில் இரு கட்சியினரும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். ஆகையால் 'ஃபிஸ்கல் க்ளிஃப்' க்கு சீக்கிரம் முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
முடிவு எட்டப்படாமல், ‘ஃபிஸ்கல் க்ளிஃப்' ஏற்பட்டால் மீண்டும் பொருளாதார வீழ்ச்சிக்கு போய் விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications