இந்திய சிறைகளில் 477 தூக்கு தண்டனை கைதிகள்!
டெல்லி: தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைய ரத்து செய்யக் கோரி தமிழகமே கொந்தளித்தது. இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் பியாந்த்சிங் கொலை வழக்கில் பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிய நிலையில் அந்த மாநிலமே ஒன்று திரண்டது. இந்த நிலையில் திடீரென மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்ட அஜ்மல் கசாப் 'ரகசியமாக' தூக்கிலிடப்பட்டான். கசாப்பை தூக்கிலிட்டுவிட்ட நிலையில் இதே நாளில் கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல் குருவையும் தூக்கிலிட வலியுறுத்தப்பட்டு வருகிறது..
இந்தியா முழுவதும் இப்படி தூக்கு தண்டனைக்காக எத்தனை பேர் 'எதிர்பார்த்து' காத்திருக்கிறார்கள்? மொத்தம் 477 பேர்!

தூக்கு கைதிகள் - உ.பிக்கு முதலிடம்
இந்தியாவிலேயே தூக்கு தண்டனைக்காக 'எதிர்பார்த்து' காத்திருக்கும் அதிக கைதிகள் இருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்தானாம்! இந்த மாநிலத்தில்தான் மொத்தம் 174 பேர் தூக்கு தண்டனை கைதிகள் இருக்கின்றனர் என்கிறது மத்திய அரசு. ராஜய்சபாவில் கேள்வி நேரத்தின் போது இந்த தகவலைத் தெரிவித்திருக்கிறது. சரி.. 2-வது 'இடம்' எந்த மாநிலத்துக்கு? கர்நாடகம்!

கர்நாடகாவில் 61 தூக்கு கைதிகள்
நாட்டிலேயே தூக்கு கைதிகள் அதிக அளவில் இருக்கக் கூடிய 2-வது மாநிலம் கர்நாடகா! இந்த மாநிலத்தின் சிறைகளில் மொத்தம் 61 பேர் தூக்கு கைதிகளாக இருக்கின்றனர். இதற்கு அடுத்த இடம் அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு! இந்த மாநிலத்தில் 50 பேர் தூக்கு தண்டனை கைதிகளாக இருக்கின்றனர்!

பீகாருக்கு 4-வது இடம்
தூக்கு தண்டனைகள் கைதிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் 4-வது இடம் பீகாருக்குத்தான். இங்கு 37 பேர் தூக்கு தண்டனை கைதிகளாக இருக்கின்றனர். டெல்லியில் 24 பேர் தூக்கு 'தண்டனை'க்காக காத்திருக்கின்றனர். இவர்களில் ஒருவர்தான் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைதான அப்சல் குரு!

குறைவான மாநிலங்கள்
இந்தியாவிலேயே மிகக் குறைவான தூக்கு கைதிகள் இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திராவுக்கு முதலிடம்! இம்மாநிலத்தில் மூவர்தான் தூக்கு கைதிகள்! ராஜஸ்தானில் 4 பேர்தான் தூக்கு கைதிகள்!

எங்கு தூக்கு கைதிகள் இல்லை?
இந்தியாவின் புதுச்சேரி உட்பட எந்த ஒரு யூனியன் பிரதேசத்திலும் ஒரு தூக்கு தண்டனை கைதி கூட கிடையாது என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறது மத்திய அரசு












Click it and Unblock the Notifications