துரை தயாநிதி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் வழக்கு... மு.க.அழகிரி

கிரானைட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு முன்ஜாமீன் கிடைத்ததை அடுத்து நேற்று மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் அங்கு வந்த மு.க. அழகிரி, எம்.பி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆளும் அதிமுக அரசு திமுக வினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். தன்னால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு தொடங்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அரசு தரப்பில் தடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.
மேலும் எனது மகன் துரை தயாநிதி மீது பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே என் மகனை கைது செய்ய துடிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
2010-ம் ஆண்டிலேயே ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் இருந்து அவர் விலகி விட்டார். துரை மீது எந்த தவறும் இல்லை. அவர் மீது தவறு இருந்தால் வழக்கு தொடரப்பட்ட போதே நானே அவரை சரண் அடையச் செய்திருப்பேன்.
இந்த வழக்கால் அவரது பிறந்தநாளையோ, திருமணநாளையோ கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இது எங்களுக்கும், அவரை விரும்பியவர்களுக்கும் வருத்தமளிப்பதாக இருந்தது. துரை தயாநிதி வெளிநாட்டுக்கு எங்கும் தப்பி ஓட முடியவில்லை. அவரது பாஸ்போர்ட்டை சரிபார்த்தாலே இது தெரியும். தற்போது அவருக்கு முன்ஜாமீன் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மகன் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி கோர்ட்டில் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications