21ம் தேதி உலகம் அழியாது... 20ம் தேதி பிரசாரம் செய்ய தி.க. திட்டம்!

Subscribe to Oneindia Tamil

Veeramani
சென்னை: மாயன் காலண்டர்படி டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியும் என்ற பிரசாரம் தவறானது. அந்த மூடத்தனத்தை தவறு என்று விளக்கும் வகையில் டிசம்பர் 20ம் தேதி தமிழகம் முழுவதும் பெரியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்வார்கள் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2012 டிசம்பர் 21ஆம் தேதியோடு உலகம் முடிந்துவிடும்; அழிந்துவிடும், மாயன் காலண்டரில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டு விட்டது என்று புளுகுகளைக் கட்டவிழ்த்து விட்டு, பிழைப்பு நடத்த மூடநம்பிக்கை வியாபாரிகளான பல சோதிடர்களும், அதைக் காசாக்கி வாழும் சிலரும் இப்படி ஒரு வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

பரிகார பூஜை, புனஸ்காரம் என்று பக்தி வியாபாரம் செலுத்திட இது ஒரு புது உத்திபோல நவீனக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது ஆதாரமற்ற, அறிவியல், வானவியல், ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறான கற்பனை, கட்டுக்கதை, புரட்டு என்று பிரபல ‘நாசா' அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த விஞ்ஞானி - மூத்த ஆய்வாளர் - டாரன்யோமென்ஸ் அவர்கள் ஒரு பேட்டியே கொடுத்து மறுத்துள்ளார்.

இதற்குமுன் இந்த நூற்றாண்டிலும் இதற்கு முன்பும் இப்படிப்பட்ட ‘கப்சாக்கள்' பல முறை பரப்பட்டு பிறகு அவை வெறும் புஸ்வாணம் ஆன கதி உலகறிந்த ஒன்றாகும். கார்ல்சேகன் என்ற பிரபல வானவியல் விஞ்ஞானி கூறினார்: அசாதாரண நிகழ்வுகள் நம்பப்பட வேண்டுமானால் அதற்கு அசாதாரண சாட்சியங்கள் அவசியம் தேவை என்றார்; அம்மாதிரி இதுவரை விடப்பட்ட புரளிகள் எதையும் ஆதாரப்படுத்திட முன்வரவில்லை!

எட்டு கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன; அதனால் உலகம் அழியப் போகிறது என்று சுமார் 15,20 ஆண்டுகளுக்கு முன்பே புரளியை கிளப்பி விட்டனர் சில ‘புருடா மன்னர்கள்!' ஒன்றும் ஆகவில்லை.

"இப்படி டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப் போகிறது என்பதற்கு ‘நிபுரு' என்ற ஒரு பெரிய பொருள் ஒன்று வந்து மோதி அழிக்கும் என்றும் கதை கட்டியுள்ளனர்; இதற்கு எவ்வித சாட்சியங்களோ, ஆதாரங்களோ கிடையாது என்றும் கூறி, டெலஸ்கோப்பிஸ் ஆதரவு சான்றுகளோ இப்படி சூரிய குடும்பத்தில் புவி ஈர்ப்பின் மூலம் ஏதும் இல்லை என்று கூறுகின்றன.

ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், பூமியும் சூரியனும் ‘மில்கிவே' என்ற பின் பாதை அருகில் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழமையான நிகழ்வே ஆகும்! அது எந்த ஒரு விளைவையோ, வினையையோ ஏற்படுத்துவதில்லை. இதுபோன்ற புரளிகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் ஸ்கைலேப் ஒன்று உடைந்து சுற்றி வந்தபோது (1979) இன்னும் 4 நாளில் உலகம் அழியப் போகிறது என்று பாமர மக்களிடையே பலமாகப் பரவி, மிகுந்த அச்ச உணர்வுடன் ஏதோ நாம் எல்லோரும் கடைசியாக விருந்து சாப்பிட்டு விடுவோம் என்று நம்பிய கிராமவாசிகள் உண்டு; மிகவும் வேதனையான வேடிக்கை இது அல்லவா?

இளம் மாணவ - மாணவிகள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, இதுபற்றி பெரியார் கல்வி நிறுவனங்களில், தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் தொடங்கி, திருச்சி, ஜெயங்கொண்டம், வெட்டிக்காடு உயர்நிலைப் பள்ளி (உரத்தநாடு அருகில்) மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து இந்த மூடநம்பிக்கையை - பெரிய வியாபாரப் - புழுதியை, உடைத்தெறிய 20.12.2012 காலை பள்ளி வகுப்புகள் துவங்கு முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் பிரச்சாரம் செய்வர்.

தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவ, பேராசிரியர்கள் பங்கேற்கும் அறிவியல் விளக்கம் 20.12.2012 அன்று பிற்பகல் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அறிவியல் மனப்பான்மையை வீடுகளில் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+